பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரை வெல்ல இந்திய அணிக்கு இவர்கள் முக்கியம் – ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்

மெல்போர்ன்,

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் காத்திருக்கிறது.

அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்று 10 வருடங்கள் ஆகிவிட்டது. இதனால் இம்முறை இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரை வெல்ல இந்திய அணிக்கு பும்ரா மற்றும் பண்ட் நல்ல உடற்தகுதியுடன் இருப்பது முக்கியம் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் இயான் சேப்பல் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

பயங்கர கார் விபத்துக்குப் பிறகு டெஸ்ட் அணிக்குத் திரும்பியுள்ள ரிஷப் பண்டின் ஆட்டம் சிறப்பாக உள்ளது. இந்திய அணியில் உள்ள விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் அவர் மிகவும் முக்கியமானவர். ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது, அவர் அணியில் மிக முக்கிய வீரராக இருப்பார்.

அதேபோல் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ராவும் உடல்தகுதியும் மிகவும் முக்கியம். பும்ராவும், முகமது சிராஜும் கடந்த முறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது, சிறப்பாக செயல்பட்டனர். தொடரின் 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடும் அளவுக்கு பும்ரா உடல் தகுதியுடன் இருப்பது மிகவும் முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.