சென்னை: “மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிப்பதில் மாநில ஆளுநர்கள், குடியரசுத் தலைவரைப் பின்பற்றும் வகையில் ஒரு அமைப்பு முறை உருவாக்கப்பட வேண்டும்” என்று காமன்வெல்த் நாடாளுமன்ற கூட்டமைப்பு கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு வலியுறுத்தினார்.
டெல்லியில் காமன்வெல்த் நாடாளுமன்றக் கூட்டமைப்பின் இந்திய பிராந்தியத்தின் 10-வது கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: “ஜனநாயகத்தை நிலைநாட்டுவதும், மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதும் சட்டப்பேரவை, நாடாளுமன்ற அமைப்புகளின் தலையாய கடமையாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 105 மற்றும் 194 ஆகியவை நாடாளுமன்ற, மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களின் அதிகாரங்கள், சிறப்பு உரிமைகள், சட்டரீதியான விலக்குகளை வழங்குகின்றன. அவ்வாறு வழங்கப்பட்ட உரிமைகள், சலுகைகள் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் சமீப கால நிகழ்வுகள் ஜனநாயகத்திற்கு பெரும் சவால்களை ஏற்படுத்தியுள்ளன.
சமீப காலங்களில், மாநில சட்டப்பேரவையின் பெரும்பான்மை உறுப்பினர்களால், சில சமயங்களில் ஒருமனதாக, நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியவில்லை. சில மசோதாக்கள், காரணமின்றி, பல ஆண்டுகளாக ஆளுநர் அலுவலகத்தில் முடங்கிக் கிடப்பதால், மக்கள் பிரதிநிதிகளான சட்டப்பேரவை உறுப்பினர்கள், மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல், அவர்களின் அதிருப்திக்கு ஆளாகின்றனர். பேரவையை அவமதிப்பது என்பது அந்த சட்டப்பேரவை உறுப்பினர்களை தேர்ந்தெடுத்த மக்களை அவமதிப்பதாகும். ஒட்டுமொத்த எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வெளியேற்றப்பட்ட சூழ்நிலையிலும், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் அவர்கள் ஓரிரு மணி நேரத்தில் தனது ஒப்புதலை வழங்குகிறார்.
ஆனால், சில மாநிலங்களில், அம்மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு கூட அம்மாநில ஆளுநர்கள் ஒப்புதல் அளிப்பதில்லை. இது சம்பந்தமாக, மாநில ஆளுநர்கள், குடியரசுத் தலைவரைப் பின்பற்றி மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளித்து, அதன் மூலம் அரசியலமைப்பு விதிகளை நிலைநிறுத்தும் வகையில் ஒரு அமைப்பு முறையை உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் தலையீட்டால் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்க முடியும். அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் எந்தக் காரணமும் கூறாமல் நிறுத்தி வைப்பதாக தெரிவித்தார். உச்சநீதிமன்றத்துக்கு இப்பிரச்சினையை எடுத்து சென்று, சட்டப்பேரவையில் மீண்டும் அந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டன.
ஆளுநர், மசோதாக்களுக்கு தனது ஒப்புதலை வழங்குவதற்கு பதிலாக குடியரசுத் தலைவரின் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார். குடியரசுத் தலைவரும், மசோதாக்களில் பலவற்றிற்கு எந்தக் காரணமும் கூறாமல் தனது ஒப்புதலை நிறுத்தி வைத்தார். இவ்வாறு மசோதாக்களை நிறுத்தி வைப்பதன் மூலம், தமிழக மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் நிறுத்தி வைப்பதற்கான காரணமும் கூறப்படாததால், சீரமைப்பு நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலை உள்ளது. நீ்ட் தேர்வு மசோதா ஆளுநர் அலுவலகம், குடியரசுத் தலைவர் அலுவலகம் இடையில் இழுத்தடிக்கப்படுவதால், லட்சக்கணக்கான தமிழக மாணவர்களின் எதிர்காலத்திற்கு பெரும் சவாலாக உள்ளது.
இத்தகைய சூழ்நிலையைத் தீர்க்க, குறிப்பிட்ட காலத்திற்குள் மாநில சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க காலக்கெடு விதிக்க வேண்டும். தங்களுக்கு இல்லாத அதிகாரங்கள் இருப்பதாகக் கருதி மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களுக்கு எதிராக ஆளுநர்கள் செயல்படும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மேலும், மத்திய அரசு கல்வி, சுகாதாரம் போன்ற பொது பட்டியலில் உள்ள பொருள்கள் குறித்து மாநில மக்களின் உணர்வுகளைப் புறக்கணித்து சட்டங்களை இயற்றுகிறது. அதன் விளைவாக, மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும், தங்கள் ஆட்சேபனைகளையும் கோபத்தையும் மாநில அரசுகளிடம் மட்டுமே காட்டுகின்றனர். பொதுப் பட்டியலில் உள்ள விஷயங்களில் மத்திய அரசு குறிப்பிட்ட அளவில் மட்டுமே தலையிட வேண்டும். மேலும், மாநில சட்டப்பேரவைகள் நிறைவேற்றும் மசோதாக்கள் மற்றும் தீர்மானங்களை மத்திய அரசு மதிக்கும் வகையில் சீர்திருத்தங்களை கொண்டு வரப்பட வேண்டும். தமிழக சட்டப் பேரவையில் ஆளுங்கட்சி உறுப்பினர்களை விட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கே அதிக வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்கு செவிசாய்த்தால் மட்டுமே ஜனநாயகம் செழிக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கருதுகிறார். மற்ற மாநில சட்டப்பேரவைகளும், நாடாளுமன்றமும் இந்த நடைமுறையை பின்பற்றும் என்று நான் நம்புகிறேன்” என மு.அப்பாவு பேசினார்.