இன்றைக்கு எந்த ஒரு சம்பவம் நடந்தாலும் உடனே அது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி விடுகிறது. மத்திய அரசுக்கு எதிராகவும் அது போன்று ஏராளமான சோசியல் மீடியா பதிவுகள் வருகிறது. அப்பதிவுகளின் உண்மை தன்மை குறித்தும், அவை எங்கிருந்து வருகிறது என்பதை தெரிந்து கொள்ளும் விதமாகவும், போலியான சோசியல் மீடியா பதிவுகளை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு கடந்த ஆண்டு தகவல் தொழில் நுட்ப சட்டத்தில் திருத்தம் செய்தது. இது மீடியா மற்றும் கருத்து சுதந்திரத்தை பாதிக்கும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கடும் விமர்சனம் எழுந்தது.
கடந்த ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான அரசு பெரும்பான்மையுடன் இருந்ததால் இச்சட்ட திருத்தத்தை கொண்டு வந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதை எதிர்த்து பத்திரிகை ஆசிரியர்கள், டிஜிட்டல் மீடியாக்கள் மற்றும் நடிகர் குனால் கம்ரா ஆகியோர் ஆகியோர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இம்மனு முன்பு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் கெளதம் பட்டேல், நீலா கோகலே ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் மாறுபட்ட தீர்ப்புக்களை வழங்கினர்.
நீலா கோக்லே மத்திய அரசின் சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாகவும், கெளதம் பட்டேல் எதிராகவும் தீர்ப்பளித்திருந்தனர். இதையடுத்து இவ்வழக்கு மூன்றாவது நீதிபதியின் முடிவுக்கு வந்தது. டைபிரேக் முறையில் வந்த வழக்கு நீதிபதி அதுல் சந்துர்கர் முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி சந்துர்கர், மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்திருத்தத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்திருத்தத்தின் படி சோசியல் மீடியாவில் வரும் பதிவுகள் உண்மையானதா அல்லது போலியானதா என்பதையும், அதனை யார் அனுப்பியது என்பதையும் கண்டறிய சோதனை மையங்களை அமைக்க முடியும். இதற்கு தடை விதிக்கும் விதமாக மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்திருத்தம் அரசியலமைப்புக்கு எதிரானது, பேச்சு சுதந்திரம் மற்றும் சமத்துவதற்கு எதிரானது என்று நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். சட்டப்பிரிவு 14 (சம உரிமை), 19 (பேச்சு சுதந்திரம்), 19(1) (g) தொழில் உரிமை சட்ட விதிகளை மீறியதாகும். இச்சட்டத்திருத்தம் தெளிவற்றதாகவும், தவறாகவும், எந்த வித வரைமுறையும் இல்லாமல் இருப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
மத்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா,”விமர்சனங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இச்சட்டத்திருத்தம் கொண்டு வரப்படவில்லை. தவறான தகவல் பரவுதை தடுக்கும் நோக்கில் மட்டுமே கொண்டு வரப்பட்டது” என்று குறிப்பிட்டார்.
மத்திய அரசு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ம் தேதி தகவல் தொழில் நுட்ப சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. இதன் படி, சோசியல் மீடியாவில் வெளியாகும் அரசுக்கு எதிரான தவறான, போலியான பதிவுகளின் உண்மை தன்மையை அறிய தனி பிரிவுகளை மத்திய அரசு ஏற்படுத்தும். மத்திய அரசு ஏற்படுத்தும் ஆணையம் குறிப்பிட்ட ஒரு சோசியல் மீடியா பதிவு தவறானது என்று கண்டுபிடிக்கும் பட்சத்தில் உடனே சம்பந்தப்பட்ட சோசியல் மீடியாவில் தங்களது பக்கத்தில் இருந்து அதனை அகற்றிவிடவேண்டும் என்பது விதிமுறை. சுப்ரீம் கோர்ட் மத்திய அரசின் இந்த சட்டத்திருத்தத்தை அரசாணையாக வெளியிட தடை விதித்து இருந்தது.