மும்பை,
மராட்டியத்தில் சட்டசபை தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் தேர்தல் முன்ஏற்பாடுகளை ஆய்வு செய்ய இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் தலைமையிலான குழு வருகிற 26-ந் தேதி மும்பை வருகிறது. குழுவில் தேர்தல் கமிஷனர்கள் ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோரும் இடம்பெற்று உள்ளனர்.
27, 28-ந் தேதிகளில் அவர்கள் தேர்தல் முன் ஏற்பாடுகள் குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி, மாநில தலைமை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர். மேலும் அரசியல் கட்சியினரையும் சந்தித்து பேச உள்ளனர்.இந்தநிலையில் மாநிலத்தில் தீபாவளிக்கு பிறகு தான் சட்டசபை தேர்தல் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.
தேர்தல் நடத்தைவிதி முறைகள் அக்டோபர் 2-வது வாரத்தில் இருந்து அமலுக்கு வரும் என கூறப்படுகிறது. மராட்டியத்தில் தீபாவளி கொண்டாட்டம் அடுத்த மாதம் 29-ந் தொடங்கி நவம்பர் 3-ந் தேதி வரை நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்வான லட்சுமி பூஜை நவம்பர் 1-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.