ஜெய்ப்பூர்: மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 பட்டத்தை வென்றுள்ளார் 18 வயதான ரியா சிங்கா. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று (செப்.22) மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 இறுதிப்போட்டி வெகு விமரிசையாக நடந்தது. இந்த கண்கவர் நிகழ்ச்சியில் முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் இந்தியாவும், நடிகையுமான ஊர்வசி ரவுதெலா, நிகில் ஆனந்த், வியட்நாம் திரைப் பிரபலம் குயங் க்வின் உள்ளிட்டோர் நடுவர்களாகப் பங்கேற்றனர்.
51 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த பிரம்மாண்ட இறுதிப் போட்டியில் குஜராத்தைச் சேர்ந்த ரியா சிங்கா, 2024 ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் இந்தியாவாக மகுடம் சூட்டப்பட்டார். முதல் ரன்னர் அப் இடத்தை பிரஞ்சல் பிரியா, 2வது ரன்னர் அப் இடத்தை சாவி வெர்ஜ், 3வது ரன்னர் அப் இடத்தை சுஷ்மிதா ராய், 4வது இடத்தை ரூஃபுஸானோ விஸோ ஆகியோர் பிடித்தனர்.
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 பட்டத்தை வென்றதை அடுத்து வரும் நவம்பர் மாதம் மெக்சிகோவில் நடக்கவிருக்கும் மிஸ் யுனிவர்ஸ் 2024 போட்டியில் இந்தியா சார்பில் ரியா சிங்க கலந்துகொள்கிறார்.
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 பட்டம் வென்றது தொடர்பாக பேசிய சிங்கா, “நான் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 பட்டத்தை வென்றிருக்கிறேன். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம். இந்த பட்டத்துக்கு என்னை தகுதிப்படுத்திக் கொள்ள நான் நிறைய உழைப்பைச் செலுத்தியுள்ளேன். இதற்கு முன் இந்தப் பட்டத்தை வென்றவர்களிடமிருந்து நான் எனக்கான உந்துதலைப் பெற்றேன்” என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான ஊர்வசி ரவுதெலா கூறுகையில், “மிஸ் யுனிவர்ஸ் 2024 பட்டத்தை இந்தமுறை இந்தியா வெல்லும் என நான் நம்புகிறேன். இங்கே பங்கேற்ற அழகிகள் அனைவரும் திறமையானவர்கள். இந்தத் திறமை இந்தியாவுக்கு வெற்றி பெற்றுத் தரும்” என்றார்