இன்ஸ்டன்ட் பே, இன்டர்நெட் பேங்கிங், கியூ.ஆர் கோடு ஆகியவை நம் வேலைகளை எவ்வளவு எளிதாக்கி இருக்கிறதோ, அதே அளவுக்கு சிக்கலாகவும் மாற்றி இருக்கிறது.
ஐதராபாத்தைச் சேர்ந்த முதிய தம்பதியின் ரூ.63 லட்சத்தை அவர்களது டிரைவரே இன்டர்நெட் பேங்கிங் மூலம் ஏமாற்றியுள்ளார். 2017-ம் ஆண்டு இந்த தம்பதி தங்களது தேவைகளுக்காக சுமார் ரூ.20 லட்சத்தை சேமிப்பு கணக்கிலும், ரூ.40 லட்ச மதிப்புள்ள மூன்று எஃப்.டியையும் போட்டு வைத்துள்ளனர். இவர்களிடம் ஸ்மார்ட் போன் இல்லாததால் இன்டர்நெட் பேங்கிங்கில் ‘வியூ ஒன்லி (View only)’ ஆப்ஷனை மட்டும் தேர்வு செய்து வைத்துள்ளனர். ஆனால் அவர்களது டிரைவர் தம்பதியின் வங்கி தகவல்களை தெரிந்துகொண்டு தனது போனில் இன்டர்நெட் பேங்கிங்கில் ‘பரிவர்த்தனை’ ஆப்ஷனை மாற்றி தேர்வு செய்து, கணக்கில் இருந்த மொத்த பணத்தையும் தன் கணக்கிற்கு மாற்றியுள்ளார். பின்னர் இந்த தம்பதியிடம் சொல்லிக்கொள்ளாமல் ஓடி சென்றுள்ளார்.
2019-ம் ஆண்டு பாஸ்புக்கில் பதிவு செய்ய போகும்போது தான், இந்த தம்பதிக்கு தங்கள் வங்கிக் கணக்கில் வெறும் ரூ.3 லட்சம் தான் இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து வங்கி மேலாளரிடம் கேட்டப்போது, அவர் சரியாக பதிலளிக்கவில்லை. அதனால் இந்தத் தம்பதியினர் போலீஸில் புகார் அளித்திருக்கின்றனர்.
‘எந்தவொரு விசாரணையும் இல்லாமல், சம்பந்தப்பட்டவர்களை நேரில் வர சொல்லாமல் ‘வியூ ஒன்லி’-ல் இருந்து ‘பரிவர்த்தனை’க்கு தேர்வை மாற்றியது குறித்து அந்த வங்கியின் மீது கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஆறு ஆண்டுகளாக நடந்து வருகிறது.
ஆன்லைன் நமக்கான வசதிகளை எளிதாக்கி கொடுத்தாலும், கூடுதல் கவனம் தேவை என்பதை இந்தச் சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.