சென்னை: தொழில்நுட்ப கோளாறு போன்ற காரணத்தால் எங்கோ ஒரிடத்தில் செல்போன் போன்ற மின்னணு சாதனங்கள் வெடித்துச் சிதறுவது பற்றி கேள்விபட்டிருக்கிறோம். ஆனால் லெபனான் நாட்டில் ஒரே நேரத்தில் 5,000-க்கும் மேற்பட்ட பேஜர் சாதனங்கள் வெடித்துச் சிதறிய நிகழ்வு மத்தியகிழக்கை மட்டும் அல்ல, மொத்த உலகையும் உலுக்கி எடுத்திருக்கிறது.
இஸ்ரேல்- காசா மோதல் விளைவாக ஹிஸ்புல்லா இயக்கம், இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது. இருநாடுகளின் எல்லைப் பகுதியில் அண்மைக்காலமாக மோதல் வலுத்திருக்கிறது. இந்த பின்னணியில் லெபனான்பகுதியில் பேஜர் குண்டுகள் வெடித்துள்ளன. இந்த தாக்குதலை நிகழ்த்தியது யார், பேஜர்கள் வெடித்தது எப்படி என்பது உறுதியாக தெரியவில்லை. இஸ்ரேல் திட்டமிட்டு தாக்குதலை நடத்தியிருக்கிறது என ஹிஸ்புல்லா இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு இஸ்ரேல் நேரடியாக கருத்து தெரிவிக்கவில்லை.
இஸ்ரேல் உளவு அமைப்பு தாக்குதலுக்கு காரணமாக இருக்கலாம் என்று உறுதியாக சந்தேகிக்கப்படுகிறது. தாக்குதலுக்கான காரணம் மற்றும் எதிர்வினை தொடர்பான அலசல்கள் ஒருபக்கம் இருந்தாலும் தாக்குதல் நிகழ்ந்தவிதம் ஏற்படுத்திய அதிர்ச்சி இன்னும் அடங்காமல் இருக்கிறது. தகவல் தொடர்பு உலகில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டு பலவகை ஸ்மார்ட்போன்கள் வந்துவிட்டாலும் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் பாதுகாப்பு காரணங்களுக்காக தங்களுக்குள் தொடர்பு கொள்ள பேஜர் சாதனங்களையே பயன்படுத்துகின்றனர்.
பேஜர் என்பது ரேடியோ அலைகளில் இயங்கும் கையடக்க சாதனம். மத்திய தொலைபேசி அமைப்பில் இருந்து பேஜர் சாதனத்துக்கு எழுத்துவடிவில் அல்லது ஒலிவடிவில் செய்திகளை அனுப்பலாம். செல்போன் மூலம் ஹிஸ்புல்லா இயக்கத் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து அந்த இயக்கத்தினர் செல்போனை தவிர்த்து வருகின்றனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக தேர்வு செய்யப்பட்ட பேஜரே இப்போது குண்டுகளாக மாறியிருக்கிறது. அதிலும் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோரின் பேஜர்கள் வெடிக்க வைக்கப்பட்டுள்ளன. தொலைவில் இருந்து இந்த சாதனங்கள் இயக்கப்பட்டுள்ளன. பேஜரில்இருந்த பேட்டரியை அதிக வெப்பம் அடைய செய்து வெடிக்க வைக்கப்பட்டிருக்க வேண்டும் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த தாக்குதல் வெகுநுட்பமாக திட்டமிடப்பட்டிருக்க வேண்டும் என்றாலும் எவ்வாறு நிகழ்ந்திருக்கும் என்பது தொடர்பாக குழப்பம் நிலவுகிறது.
பேஜர் சாதனங்களை ஏதோவிதத்தில் ஹேக் செய்து வெடிக்கச் செய்திருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால் இது ஒன்றுஅல்லது ஒரு சிலசாதனங்களை வெடிக்கச் செய்யவே சாத்தியம், எனவே இந்த தாக்குதல் சாதனங்கள் தயாரிப்புநிலையில் விநியோக சங்கிலியில் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்கின்றனர். விநியோக சங்கிலி தாக்குதல் பொதுவாக மென்பொருள் அளவில்தான் நிகழும் என கருதப்படுவதற்கு மாறாக முதல்முறையாக வன்பொருள் சாதனத்தில் ஊடுருவல் நிகழ்ந்துள்ளது
தாக்குதலுக்கு உள்ளான பேஜர் சாதனங்களில் அவற்றின் தயாரிப்பு கட்டத்திலேயே விஷமிகள் கைவரிசை காட்டி பேட்டரியில் வெடிபொருளை இணைத்திருக்கலாம் என சைபர் தாக்குதல் வல்லுநர்கள் கருதுகின்றனர். குறிப்பிட்ட சூழலில் வெளிகட்டளை மூலம் இவை வெடிக்க செய்யும் வகையில் அமைக்கப்பட்டிருக்கலாம் என்கின்றனர். பேஜர் சாதனத்தில் உள்ள பேட்டரியை மிகவும் சூடாக்கி வெடிபொருளை இயக்கியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
ஹிஸ்புல்லா இயக்கம் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் புதிதாக ஆயிரக்கணக்கில் பேஜர்களைவாங்கியதாகவும் அந்த பேஜர்களே இப்போது வெடிக்க வைக்கப்பட்டுள்ளன என்றும் தெரியவந்துள்ளது. தைவான் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுதான் இந்த பேஜர்களை தயாரித்துள்ளது. ஆனால் அந்நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் இந்த பணியை ஐரோப்பாவில் வழங்கியதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது
இந்த தாக்குதலின் நோக்கம் தொடர்பான விளக்கம் மேலும் திகைக்க வைப்பதாக இருக்கிறது. ஹிஸ்புல்லா இயக்கத்தை செயலிழக்கச் செய்வதே இந்ததாக்குதலின் முக்கிய நோக்கம் என கருதப்படுகிறது. முக்கியமாக அதன் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் அச்சத்தையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்த வேண்டும். பேஜர் சாதனங்களை வெடிக்கச் செய்ததன் மூலம்எங்கே இருந்தாலும் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் எங்களால் தாக்குதல் நடத்தி நிலைகுலைய வைக்க முடியும் எனும் செய்தியை ஹிஸ்புல்லா ஆதரவாளர்கள் மத்தியில் வலுவாக சொல்லும் வகையில் தாக்குதல்அமைந்துள்ளது என வெளிநாட்டு ராணுவ வல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்
ரத்தக் களரியை உண்டாக்கிய இந்த தாக்குதல் உளவியல் நோக்கிலும் பெரும்பாதிப்பை உண்டாக்கும். பேஜர் சாதனங்கள் வெடிப்பதை பார்த்தவர்கள் இனி இந்த சாதனங்களை கண்டாலே நடுங்குவார்கள். எப்போதும் ஆழ்மனதில் ஒரு கிலி இருந்துகொண்டே இருக்கும். எனவே இந்த தாக்குதல் நீண்டகால பாதிப்பை உண்டாக்குவதோடு ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைமை மீது நம்பிக்கை இழக்க வழிவகுக்கும் என மனநல வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்த தாக்குதலுக்கான ஹிஸ்புல்லாவின் எதிர்வினை நிச்சயம் என்றும் இஸ்ரேல் காசா மோதலைமேலும் தீவிரமாக்கும் என்றும் அஞ்சுகின்றனர். இதன்அதிர்வுகள் மத்திய கிழக்கில் பல மட்டங்களில் எதிரொலிக்கலாம் என்கின்றனர். எனினும்தாக்குதலுக்கு உள்ளான பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் இந்த அதிர்வுகள் நீங்காவடுவாக அமையும் என்ற கவலையும் அதிகரிக்கிறது .
மேலும் பேஜர் குண்டுகள் மூலம் வன்பொருள்கள் விநியோக சங்கிலியில் கைவைக்கப்பட்டிருக்கிறது. இது எதிர்காலத்தில் மேலும் பல பிரச்சினைகளை உண்டாக்கலாம் என்கின்றனர். இது சைபர் பாதுகாப்பை மேலும் கேள்விக்குள்ளாக்கும். தோட்டாக்களும் வெடிகுண்டுகளும் எப்போதுமே மனிதநேயத்துக்கு எதிரானவை. இந்த வரிசையில் இப்போது இணைந்திருக்கும் பேஜர்குண்டு சர்வதேச மோதல்களை மேலும் மோசமாக்கும்.