லெபனான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்: 100 பேர் பலி, காயம் 400 – போர் பதற்றம் அதிகரிப்பு

புதுடெல்லி: லெபனானில் புதிதாக இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 100 பேர் உயிரிழந்தனர். மேலும், 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். முன்னதாக, ஹிஸ்புல்லா இயக்கத்தினரின் ஆதிக்கம் நிறைந்த லெபனானின் தெற்கு பகுதியில் இருந்து உடனடியாக வெளியேறும்படி பொதுமக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்தது கவனிக்கத்தக்கது.

இஸ்ரேல் ராணுவம் மற்றும் லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 17-ம் தேதி ஹிஸ்புல்லா இயக்கத்தினர் பயன்படுத்திய 5,000 பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின. இதில் பலர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது மிகப் பெரிய அளவில் தாக்குதல் நடத்துவோம் என்று ஹிஸ்புல்லா அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. இதனைத் தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பு லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கத்தினரைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. லெபனானின் தலைநகர் பெரூட்டில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர். இவ்வாறு மோதல் நீடித்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில், லெபனானில் திங்கள்கிழமை இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 100 பேர் உயிரிழந்தனர். மேலும், 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். முன்னதாக, இஸ்ரேல் இன்று அதிகாலை தெற்கு லெபனான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. அதனைத் தொடர்ந்து, அடுத்த நகர்வாக ஹிஸ்புல்லாக்களின் ஆயுதக்கிடங்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்திட இஸ்ரேல் திட்டமிட்டிருப்பதாக தகவலும் வெளியானது.

தெற்கு லெபனானில் கிராமங்கள், நகரப் பகுதிகள் உள்பட பல இடங்களை ஹிஸ்புல்லா ஆயுதக் கிடங்குகளாக பயன்படுத்தி வருவதாக இஸ்ரேல் தெரிவித்திருந்தது. ஹிஸ்புல்லா அமைப்பின் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்த உள்ள நிலையில், லெபனானில் உள்ள மக்கள் உடனடியாக தங்கள் வீடுகள் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களைச் சேமித்து வைத்திருப்பதாகக் கூறப்படும் கட்டிடங்களை விட்டு வெளியேறுமாறு எச்சரித்துள்ளது.

லெபனானில் இஸ்ரேல் பாதுகாப்புப் படை வான்வழித் தாக்குதல்களை மட்டுமே நடத்தி வரும் சூழலில், தரைவழித் தாக்குதல்களை உடனடியாக நிகழ்த்தும் திட்டம் குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். இதனால், லெபனானில் பதற்றமான சூழல் நிலவுகிறது. மக்களும் அச்சத்தில் உள்ளனர்.

அமெரிக்கா விடுத்த அலர்ட்: கடந்த ஜூலை மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹஸன் நசரல்லாவின் வலதுகரமாக செயல்பட் புவத் ஷுக்கர் கொல்லப்பட்டதை தொடர்ந்து லெபனான் நாட்டுக்கான பயண கட்டுப்பாடுகளை அமெரிக்கா அறிவித்திருந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் சிறப்பு அதிரடிப் படையான ‘ரத்வான்’ படையின் தளபதி இப்ராஹிம் அக்கீல் மற்றும் அஹமது வாபி ஆகியோர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது. இந்தப் பின்னணியில், தனது குடிமக்களை லெபனான் நாட்டிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா அறிவுறுத்தியது. விமானப் போக்குவரத்து சேவை இன்னும் அமலில் உள்ள நிலையில், அதனை பயன்படுத்தி உடனடியாக லெபனானை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியது.

கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல், கடந்த 2006-ம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற இஸ்ரேல் – ஹிஸ்புல்லா போருக்குப் பிறகு பெய்ரூட்டில் நடத்தப்பட் மிக மோசமான தாக்குதலாக கருதப்படுகிறது. இஸ்ரேல் நடத்திய இந்த வான்வழித் தாக்குதலில் 37 உயிரிழந்ததாக லெபனான் சுகாதார துறை அமைச்சர் பிராஸ் அபைது தெரிவித்துள்ளார். இதற்கு பதிலடியாக ஹிஸ்புல்லா அமைப்பினர் சனிக்கிழமை இரவு இஸ்ரேலின் ஜெஸ்ரீ பள்ளத்தாக்கின் வடக்கு நகரங்கள் மீது10 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இவற்றில் பெரும்பாலானவற்றை இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்துவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தாக்குதலில் 60 வயது முதியவர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோதல் தீவிரமானதிலிருந்து இஸ்ரேலிய எல்லைக்குள் ஆழமாக ஊடுருவி ஹிஸ்புல்லாக்கள் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொண்ட ஹிஸ்புல்லா ராமட் டேவிட் விமானப் படைத் தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளனர். இது, லெபனான் எல்லையிலிருந்து 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இஸ்ரேலிய விமானப் படைக்கு சொந்தமான மிக முக்கியமான விமான படை தளமாகும். இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும்விதமாக, இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் லெபனான் முழுவதும் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகின்றன. சுமார் 300 ஹிஸ்புல்லா நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.