“விஜயகாந்த் சார் என்னை சமாதானப்படுத்தினார்!" -`மாநகர காவல்' ரீரிலீஸ் குறித்து லியாகத் அலிகான்

ஏவிஎம் தயாரிப்பில் விஜயகாந்த் நடித்த, ‘மாநகர காவல்’ கடந்த வாரம், ரீரிலீஸ் ஆகி, இப்போதும் வரவேற்பை பெற்று வருகிறது. அதைப் போல சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ படத்தில் விஜயகாந்தின் ‘பொன்மன செல்வன்’ படப் பாடலான ‘நீ பொட்டு வச்ச தங்கக் கொடம்’ பாடல் இடம்பெற்றதும் வரவேற்பை குவித்து வருகிறது.

கடந்த 1991ம் ஆண்டில் விஜயகாந்த், சுமா ரங்கநாத், நாசர், லட்சுமி, ஆனந்த ராஜ் என பலரும் நடித்த படம் ‘மாநகர காவல்’. மறைந்த இயக்குநர் எம்.தியாகராஜன், இதனை இயக்கியிருப்பார். சந்திரப்போஸ் இசையமைத்திருந்தார். இந்நிலையில் 32 வாரங்களுக்கு பின் குரு ராஜா இண்டர்நேஷனல் சார்பில் ஏவிஎம். நிறுவனத்திடம் இருந்து உரிமை பெற்று, ரீரிலீஸ் செய்திருந்தனர். விஜயகாந்தின் ‘புலன் விசாரணை’, ‘ஏழை ஜாதி’, ‘கேப்டன் பிரபாகரன்’, ‘மாநகர காவல்’ என அவரது பல படங்களில் வசனங்கள் அனல் பறக்கும். அத்தகைய நறுக் தெறிக் வசனங்களை எழுதிய லியாகத் அலிகானிடம் ‘மாநகர காவல்’ குறித்து கேட்டோம்.

இராவுத்தருடன்..

”’மாநகர காவல்’ படத்தை நான் இயக்கியிருக்க வேண்டியது. விஜயகாந்த் சாரும், இப்ராகிம் ராவுத்தர் சாரும் என்னைத்தான் சொல்லியிருந்தாங்க. ஆனா, படத்தோட இயக்குநர் தியாகராஜனோட நண்பர்னால, படத்தை இயக்கற வாய்ப்பு எனக்கு அமையல. இப்படி சில மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்த படம் இது.” என்றபடி பேச ஆரம்பித்தார் லியாகத் அலிகான்.

”ஏவி.எம். சரவணன் சார் ஒருநாள் என்னைக் கூப்பிட்டு, ‘இந்த படத்தோட கதையை கேட்டுட்டு நீங்க வசனங்களை எழுத ஆரம்பிக்கலாமே சார்’னு கேட்டுக்கிட்டார். கதையை கேட்டேன். 1970கள்ல வர்ற கதை மாதிரி அது இருந்தது. அதனால அந்தக் கதை எனக்கு பிடிக்கலை. அதை சரவணன் சார்கிட்டேயும் ‘கதை பிடிக்கலை’னு சொல்லிட்டேன்.

உடனே அவர், ”எங்க அப்பா காலத்தில் இருந்து நாங்க முதலில் கதையை தான் தேர்வு செய்வோம். அதன்பிறகு தான் அதனை இயக்கக்கூடிய டைரக்டரை முடிவு செய்வோம். நாங்கள் தேர்வு செய்திருக்கும் கதை பிடிக்க வில்லை என்று எந்த இயக்குநர் சொல்கிறாரோ.. அவரை மாற்றிவிட்டு, கதையை பிடிக்கும் இயக்குநரைதான் செலக்ட் பண்ணுவோம். விஜயகாந்த் சாரை நம்பி, முதல் முறையா நாங்கள் கதை கேட்காமலேயே இதை செலக்ட் பண்ணிட்டோம். இது பத்தி விஜயகாந்த்கிட்ட கேட்கும் போது, ‘லியாகத் அண்ணே’ பாத்துக்குவார்’னு உங்களைச் சொன்னார். அதான் உங்ககிட்ட கருத்து கேட்கறோம்’ என சரவணன் சார் சொன்னார். அதாவது, ஏவி.எம். நிறுவனத்தினர் விஜயகாந்தை நம்பினார்கள். கேப்டனோ என்னை நம்பி, பெரிய பொறுப்பை கொடுத்திருக்கார். ஏன்னா அவரோட ‘பாட்டுக்கொரு தலைவன்’, ‘ஏழை ஜாதி’, ‘எங்க முதலாளி’ என பல படங்களை இயக்கினதால, அவருக்கு என் மீது அளவுகடந்த நம்பிக்கை உண்டு. எனக்கு வாழ்க்கை கொடுத்து, உயர்த்தியவர் அவர் என்பதால், விஜயகாந்தின் நம்பிக்கையை நானும் காப்பாத்துவேன்.

‘மாநகர காவல்’

அதனால, கதையை மாத்தி கொடுக்கறேன்னு சொல்லி, ‘மாநகர காவல்’ திரைக்கதையையே மாத்தி எழுதிக் கொடுத்தேன். பிரதமருக்கு அடுத்த இடத்தில் இருக்கறவர், பிரதமரையே கொலை செய்துவிட்டு அவரது இடத்தை அடைய திட்டமிடுறார்.. என்பதை மையமாக வைத்து மாத்தி எழுதினேன். அந்தக் கதை சரவணன் சாருக்கு ரொம்பவே பிடித்துவிட்டது.

அதே வேகத்தில் ஷூட்டிங்கும் போய், படத்தையும் முடித்துவிட்டு வந்துட்டாங்க. ஆனால், என்கிட்ட படத்தை காண்பிக்க வில்லைை. படத்துல வசனம் லியாகத் அலிகான் என்று மட்டும் இருந்தது. எனக்கு அதிர்ச்சியாகிடுச்சு. ஏன்னா, என் பெயர் கதை, திரைக்கதை, வசனம் என்று வந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி வராமல் போனதால், விஜயகாந்த் சார்கிட்டேயும், ராவுத்தர் சார்கிட்டேயும் போய் முறையிட்டேன். அவங்க என்னை சமாதானப்படுத்தினாங்க. ”நம்ம படம்தாண்ணே.. உங்க உழைப்புதான் எப்போதும் எங்களுக்கு தெரியும்தானே!’னு சொன்னதால நானும் சமாதானம் ஆனேன். அப்புறம் படம் ரிலீஸ் ஆனது. தமிழில் ஹிட் ஆனது. அதை தெலுங்கில் டப் செய்து வெளியிட்டு அங்கே பெரிய ஹிட் ஆச்சு. அந்த சமயத்துல தெலுங்கில் விஜயகாந்துக்கு தொடர்ச்சியா மூணு படங்கள் பெரிய ஹிட் ஆனது. ‘கேப்டன் பிரபாகரன்’, ‘புலன்விசாரணை’, ‘மாநகர காவல்’. இந்த மூணு படங்களின் தெலுங்கு டப்பிங்கை எழுதிய ரைட்டர், என்னை நேரில் வந்து சந்தித்து, பொன்னாடை போட்டு பாராட்டினார். இன்னொரு விஷயம், இந்த படத்தில் ஆனந்தராஜ் பேச்சுக்கும் அவ்வளவு கைத்தட்டல் விழும். அவருக்கும் பெரிய பெயர் கொடுத்தது.

கலைஞர் தலைமையிலான பாராட்டு விழா ஒன்றில்..

இதுவரை 35 படங்களுக்கு மேல வசனம் எழுதியிருப்பேன். 6 படங்கள் இயக்கியிருக்கேன். என்னை வசனகர்த்தா ஆக்கினவர் விஜயகாந்த் தான். அதனால ‘மாநாகர காவல்’ ல கதையில் என் பெயர் வரலைனாலும் நான் பெரிதாக எடுத்துக்கவில்லை. காரணம், விஜயகாந்த் மீதான அன்புதான். அதைப் போல சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ படத்துல விஜயகாந்த் பாட்டு வருது என்றும், தியேட்டர்கள்ல ஜனங்க ரசித்து பார்க்கிறார்கள் என்றும் கேள்விப்பட்டேன். நான் இன்னும் படம் பார்க்க வில்லை. அந்த இயக்குநர் விஜயகாந்தின் ரசிகரானு தெரியல. ஆனால், விஜயகாந்தின் மீது பாசம் வைத்திருக்கார்னு தெரியுது. சந்தோஷமா இருக்கு” என்கிறார் லியாகத் அலிகான்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.