பெய்ரூட்: “இஸ்ரேலின் யுத்தம் லெபனான் மக்களுடனானது அல்ல. அது ஹிஸ்புல்லா உடனானது. நீண்டகாலமாக ஹிஸ்புல்லா உங்களை மனித கேடயங்களாக பயன்படுத்தி வருகிறது” என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
லெபனானில் இன்று புதிதாக இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 274 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெண்கள், குழந்தைகளும் அடங்குவர். மேலும், 1000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தெற்கு லெபனானில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர். இஸ்ரேலின் இச்செயலுக்கு ஹமாஸ் உள்ளிட்ட அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், லெபனான் மக்களுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது எக்ஸ் பக்கத்தில் காணொலிச் செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “லெபனான் மக்களுக்கு நான் ஒரு செய்தியை கூற விரும்புகிறேன். இஸ்ரேலின் யுத்தம் உங்களுடன் அல்ல. அது ஹிஸ்புல்லா உடனானது. நீண்டகாலமாக ஹிஸ்புல்லா உங்களை மனித கேடயங்களாக பயன்படுத்தி வருகிறது. உங்களுடைய அறைகளில் ராக்கெட்டுகளையும், கேரஜ்களில் ஏவுகணைகளையும் வைத்திருக்கிறது.
அந்த ராக்கெட்டுகளும், ஏவுகணைகளும் நேரடியாக எங்கள் நகரங்கள் மீதும் எங்கள் குடிமக்கள் மீதும் குறி வைக்கப்பட்டன. ஹிஸ்புல்லாவின் தாக்குதலில் இருந்து எங்கள் மக்களை பாதுகாக்க நாங்கள் இந்த் ஆயுதங்களை அப்புறப்படுத்த வேண்டும். இன்று காலை முதல், ஆபத்தில் இருந்து விலகிச் செல்லுமாறு உங்களை இஸ்ரேலிய ராணுவப் படை எச்சரித்தது. இந்த எச்சரிக்கையை தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறு நான் உங்களை வலியுறுத்துகிறேன். உங்களுடைய உயிர்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களின் உயிர்களுக்கும் ஹிஸ்புல்லா ஆபத்தை ஏற்படுத்த அனுமதிக்காதீர்கள். லெபனானுக்கு ஹிஸ்புல்லா ஆபத்தை ஏற்படுத்த அனுமதிக்காதீர்கள். தயவுசெய்து ஆபத்திலிருந்து இப்போதே விலகிச் செல்லுங்கள். எங்களுடைய ஆபரேஷன் முடிந்ததும், நீங்கள் உங்களுடைய வீடுகளுக்கு திரும்பலாம்” இவ்வாறு நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
Message for the people of Lebanon: pic.twitter.com/gNVNLUlvjm
— Benjamin Netanyahu – בנימין נתניהו (@netanyahu) September 23, 2024
இஸ்ரேல் ராணுவம் மற்றும் லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 17-ம் தேதி ஹிஸ்புல்லா இயக்கத்தினர் பயன்படுத்திய 5,000 பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின. இதில் பலர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது மிகப் பெரிய அளவில் தாக்குதல் நடத்துவோம் என்று ஹிஸ்புல்லா அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. இதனைத் தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பு லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கத்தினரைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து இந்த மோதல் நீடித்த வண்ணம் உள்ளது.