ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில், திருப்பதி கோயில் லட்டு தயாரிப்பில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்வைத்த குற்றச்சாட்டும், அதன் பிறகான சோதனையில் அது உறுதியானதும் விவாதப்பொருளாக இருக்கிறது. இருப்பினும், ஜெகன் மோகன் ரெட்டி இதனை மறுத்துவருகிறார். அடுத்தகட்ட சோதனைகளும் நடைபெறுகின்றன.
இந்த நிலையில், திருப்பதி லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் அமுல் (Amul) பிராண்ட் நெய் என எக்ஸ் தளத்தில் பதிவுகள் வெளியாகியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் அமுல் நிறுவனம், தங்கள் நிறுவனத்துக்கு அவதூறு ஏற்படுத்தும் நோக்கத்துடன் சில நபர்கள் தவறான தகவல்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக, அகமதாபாத் காவல் நிலையத்தில் ஏழு பேர் மீது புகாரளித்தது.
மேலும், அமுல் பிராண்டின் உரிமையாளரான கூட்டமைப்பின் நிர்வாக இயக்குநர் ஜெயன் மேத்தா, `எங்கள் தயாரிப்புகளை ஒருபோதும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு வழங்கவில்லை (TTD). இந்த தவறான தகவலால் அமுல் நிறுவனத்தை நம்பி இருக்கும் 3.6 மில்லியன் பால் பண்ணை விவசாயிகளின் குடும்பங்கள் பாதிக்கப்படும். எனவே, இதுபோன்ற தவறான தகவல்களிலிருந்து விலகியிருக்குமாறு மக்களைக் கேட்டுக் கொள்கிறோம்’ என்று தெரிவித்தார்.
மறுபக்கம், குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு (GCMMF) இந்த விவகாரத்தில், `ISO சான்றளிக்கப்பட்ட எங்களின் அதிநவீன உற்பத்தி நிலையங்களில் அமுல் நெய் உயர்தர தூய பால் கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம். இந்தப் பதிவு அமலுக்கு எதிரான தவறான பிரசாரத்தை நிறுத்தவே வெளியிடப்படுகிறது’ என்று ட்வீட் செய்தது.
இவ்வாறிருக்க, அமுல் நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல்களைப் பரப்பியதாக, குற்றம் சாட்டப்பட்டவர்கள்மீது பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 336(4), 196(1) A மற்றும் தகவல் தொழில்நுட்ப(IT) சட்ட விதிகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.