முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராகக் கேரளாவில் பல இடங்களில் உண்ணாவிரதங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனைக் கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கத்தினரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
அக்டோபர் 1ஆம் தேதி முதல் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் முல்லைப்பெரியாறு அணை வரவுள்ளது. இதற்கிடையே கேரளாவைச் சேர்ந்த ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை அடிப்படையாக வைத்து, “ஓராண்டுக்குள் நிபுணர் குழு மீண்டும் அணையை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.” என்று மத்திய நீர்வள ஆணையம் பரிந்துரைத்துள்ளது. ஏற்கெனவே அணை பலவீனமாக உள்ளதாகக் கூறிவரும் கேரள அரசு, இதுபோன்ற ஆய்வை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வர் எனத் தமிழக விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
இதற்கிடையே கேரளாவில் முல்லைப்பெரியாறு அணையை இடித்து அருகே புதிய அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனைக் கண்டித்து பெரியாறு, வைகை பாசன விவசாய சங்கத்தினர் நேற்று தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள லோயர் கேம் பென்னிகுவிக் மணிமண்டபம் அருகில் தேனி கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் முற்றுகை போராட்டத்தில் செய்தனர்.
போராட்டக்காரர்கள் லோயர்கேம் காவல் நிலையத்திலிருந்து ஊர்வலமாக வந்து பென்னிகுவிக் மணிமண்டபம் அருகில் சாலை மறியல் போராட்டம் மற்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அணைக்கு எதிராக விஷம பிரசாரம் செய்யும் கேரள அரசியல்வாதிகளையும், அமைப்பினரையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. கேரள மாநிலத்தை நோக்கிச் செல்ல முயன்ற விவசாய சங்கத்தினரைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.