Selvaraghavan: `தமிழ் மக்களுக்கு ஒரு வேண்டுகோள்..' – தமிழ் மொழி குறித்து செல்வராகவன் உருக்கம்

‘காதல் கொண்டேன்’, ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மயக்கம் என்ன’ போன்ற பல கல்ட் கிளாசிக் திரைப்படங்களை இயக்கியவர் செல்வராகவன்.

நீண்ட நாள்களுக்குப் பிறகு ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘என். ஜி. கே’, ‘நானே வருவேன்’ படங்களை இயக்கியவர், சமீபகாலமாக திரைப்படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தனுஷ் இயக்கிய ‘ராயன்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இஸ்டாகிராமில் அவ்வப்போது தான் நினைக்கும் விஷயங்களைப் பகிர்ந்து வரும் செல்வராகவன், தற்போது தமிழில் பேசுவதை அவமானமாகக் கருத வேண்டாம் என்று காணொலி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

செல்வராகவன்

அதில், “தமிழ் மக்களுக்கு ஒரு வேண்டுகோள்: ‘மெல்லத் தமிழ் இனிச் சாகும்’ என்றார் மகாகவி பாரதியார். அது இன்றைக்கு உண்மையாகி வருகிறது. ஆங்கிலம் தெரியாதவர்கள் எப்படியாவது திக்கித் திணறி ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்ள கடுமையாக முயற்சி செய்கிறார்கள். தமிழில் பேசுவதை அவமானமாக, அருவருக்கத்தக்கதாக நினைக்கிறார்கள். ஆங்கிலம் பேசுவதற்கான அவசியம் எனக்கு நன்றாகத் தெரிகிறது. ஆனால், எந்த இடத்திலும் தமிழ் பேசுவதை அவமானமாக நினைக்காதீர்கள் என்றுதான் கூறுகிறேன்.

நான் பள்ளி, கல்லூரிகளில் ஆங்கிலம் தெரியாமல் நிறைய கஷ்டப்பட்டிருக்கிறேன். நிறைய மன அழுத்ததிற்குள்ளாகியிருக்கிறேன். எல்லோரும் ஆங்கிலத்தில் பேசுவார்கள். நான் மட்டும் ஆங்கிலம் தெரியாமல் கூனிக் குறுகி நிற்பேன். எப்படியோ படித்து முடித்து வெளியே வந்தபிறகு, ஒரு கை பார்த்துவிடலாம் என்று ஆங்கில நாளிதழ்கள், புத்தகங்கள் படித்து ஆங்கிலத்தைப் பேசும் அளவிற்குக் கற்றுக் கொண்டேன். ஆங்கிலத்தைப் படிப்படியாகக் கற்றுக் கொண்டு சினிமாவிற்கு வந்த பிறகு பேச ஆரம்பித்துவிட்டேன். இன்றைக்கும் ஆங்கிலத்தைச் சரியாகப் பேசுகிறேனா என்றெல்லாம் தெரியாது. அதைப் பற்றி எனக்குக் கவலையுமில்லை.

ஆங்கிலம் கற்றுக் கொள்ளுங்கள். ஆனால், எங்கு, எந்த உலக நாடுகளுக்குப் போனாலும் தமிழ் பேசுவதை அவமானமாக நினைக்காதீர்கள். முடிந்த அளவிற்குத் தமிழில் பேசுங்கள். வளர்ந்த உலக நாடுகள் பல தங்களது தாய் மொழியில்தான் பேசுகிறார்கள். தாய் மொழியில் பேசுவதைப் பெருமையாக நினைக்கிறார்கள். அவர்கள் ஆங்கிலம் தெரியவில்லை என்று வருத்தப்படுவதில்லை. அதுபோல நாமும் ஆங்கிலம் தெரியவில்லை என்று வருந்தத் தேவையில்லை. வெளிநாட்டவர்கள் பலர் இங்கு வந்து அவ்வளவு அழகாகத் தமிழ் கற்றுக் கொண்டு பேசுகிறார்கள். நாம் ஏன் தமிழில் பேசுவதை அவமானமாக நினைக்க வேண்டும். எங்கு சென்றாலும் தலை நிமிர்ந்து தமிழில் பேசுங்கள். கடைகளில் தமிழ் பேசினால்தான் பொருளை வாங்க வேண்டுமென்றால், அப்படிப்பட்ட கடையே நமக்குத் தேவையில்லை. தமிழில் பேசினால் பெண் தோழிகள் உங்களை கேவலமாகப் பார்த்தால், அப்படிப்பட்ட பெண்ணே தேவையில்லை என்று உதரித்தள்ளி விடுங்கள். நமக்கு ஆயிரம் அழகான, நல்ல தமிழ் பெண்கள் இருக்கிறார்கள். உலகிலேயே மிகவும் பழைமையான மொழிகளில் ஒன்று தமிழ் மொழி. அந்தத் தமிழ் மொழியில் பேசுவதைப் பெருமையாக நினைத்துக் கொள்ளுங்கள். எங்கு சென்றாலும் தயங்காமல் தமிழில் பேசுங்கள். நம் தமிழ் மொழியை உலகெங்கிலும் கொண்டு சேர்ப்போம்.” என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.