சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் ‘மிக அழகான ஆளுநர்’ எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.
தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர்.
இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாயப்படுத்தி உறவில் ஈடுபட வைத்ததாகத் தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாகக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். செப்டம்பர் மாதம் பதவியிலிருந்தும், கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார்.
இது குற்றச்சாட்டுத் தொடர்பான விசாரணை நடந்து வந்த நிலையில்தான் 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த வழக்கு விசாரணைக்குப் பிறகு ஜாங் யாங், “என் முன்னாள் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், என்னை வளர்த்த தலைவர்களை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை. உண்மையில் நான் என் செயலுக்காக வெட்கப்படுகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.