நியூயார்க் (அமெரிக்கா): ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் வங்கதேசத்தின் பிரதிநிதியாக அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து வங்கதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தை அடுத்து, அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினமா செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பி வந்தார். இதையடுத்து, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ், வங்கதேசத்தின் தலைமை ஆலோசகராக பதவியேற்றார்.
நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் வங்கதேசத்தின் சார்பில் பங்கேற்க முகமது யூனுஸ் வந்துள்ள நிலையில், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான வங்கதேசத்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஷேக் ஜமால் ஹுசைன் கூறுகையில், “டாக்டர் முகமது யூனுஸ் அரசியல் சாசனத்திற்கு விரோதமாக, சட்ட விரோதமாக அதிகாரத்தை கைப்பற்றியவர். கறைபடிந்த அரசியலுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளார். இதனால், ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். வங்கதேச மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்யவில்லை. நாங்கள் ஐ.நா.வை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். முகமது யூனுஸ் இங்கு வங்கதேச மக்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை” என தெரிவித்தார்.
போராட்டத்தில் ஈடுபட்ட டி.எம். ரொனால்ட் என்பவர், “நாங்கள் மதச்சார்பற்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டுள்ளோம். முகமது யூனுஸ் அதிகாரத்தை வலுக்கட்டாயமாக கைப்பற்றிய பிறகு, அவர் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களை கொல்ல தொடங்கினார். வங்கதேசத்தில் எங்கள் மக்கள் பாதுகாப்பாக இல்லை” எனக் குற்றஞ்சாட்டினார்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய டாக்டர் ரஹ்மான், “11.7 கோடி வங்கதேச மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டவிரோத, தேர்ந்தெடுக்கப்படாத நபருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே நான் இங்கு வந்துள்ளேன். அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அவர் மாணவர்களால் நியமிக்கப்பட்டவர். சிறுபான்மையினர் அல்லது யாரைப் பற்றியும் அவருக்கு அக்கறை இல்லை. அவர் சட்டவிரோதமாக நாட்டை ஆக்கிரமித்துள்ளார்” எனக் குறிப்பிட்டார்.