ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த ரூ.8,000 கோடி தேவை: ராம்நாத் கோவிந்த் குழுவிடம் தேர்தல் ஆணையம் தகவல்

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவை மற்றும்அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் (ஒரே நாடு ஒரே தேர்தல்) நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ஆராய குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

அக்குழு கடந்த மார்ச் மாதம் சமர்ப்பித்த அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை கடந்த 18-ம் தேதிஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, இது தொடர்பான (அரசியல் சாசன திருத்த) மசோதா வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த திட்டத்தை அமல்படுத்த அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்வது சவாலான விஷயமாக இருக்கும். இதுமட்டுமல்லாமல் வாக்காளர் பட்டியல் முதல் மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் அலுவலர்களை வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பி வைப்பது வரையிலான தளவாட சிக்கலையும் அரசு எதிர்கொள்ள வேண்டி உள்ளது.

மேலும் இது தொடர்பாக ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவிடம் தேர்தல் ஆணையம் கடந்த ஜனவரி மாதம் ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது: ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த போதிய காலஅவகாசம் தேவை. வரும் 2029-ல்ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தைஅமல்படுத்த ரூ.7,951 கோடி தேவைப்படும். மேலும் வரும் 2029-க்குள் நாடு முழுவதும் உள்ள வாக்குப் பதிவு மையங்களின் எண்ணிக்கையை 13.6 லட்சமாக அதிகரிக்க வேண்டும். 53.8 லட்சம் வாக்கு இயந்திரங்களும் (பியு) 38.7 லட்சம் கட்டுப்பாட்டு இயந்திரங்களும் (சியு) 41.6 லட்சம் விவிபாட் கருவிகளும் தேவைப்படும். இப்போது 30.8 லட்சம் பியு, 22.1 லட்சம் சியு, 23.8 லட்சம் விவிபாட் கருவிகள் கையிருப்பில் உள்ளன. இவற்றில் 3.6 லட்சம் பியு, 1.25 லட்சம் சியு 2029-க்குள் காலாவதி ஆக உள்ளன. எனவே, கூடுதலாக 26.5 லட்சம் பியு, 17.8 லட்சம் சியு, 17.8 லட்சம் விவிபாட் கருவிகள் கொள்முதல் செய்யப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.