கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் பூண்டி ஏரியை வந்தடைந்தது

திருவள்ளூர்: சென்னையின் குடிநீர் தேவைக்காக, கடந்த 19-ம் தேதி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர், நேற்று (திங்கள்கிழமை) இரவு பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது.

சென்னையின் குடிநீர் தேவைக்காக, தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ், ஆந்திர அரசு ஆண்டு தோறும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி, ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி என, மொத்தம் 12 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீரை வழங்கவேண்டும்.

அந்த வகையில், ஆந்திர அரசு, சென்னை குடிநீர் தேவைக்காக ஜூலை முதல் அக்டோபர் வரை வழங்க வேண்டிய கிருஷ்ணா நீரை வழங்கவேண்டும் எனக் கோரி, தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் ஆந்திர நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு கடந்த ஜூலை மாதம் முதல் வாரத்தில் கடிதம் எழுதினர்.

இதையடுத்து, ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து சென்னை குடிநீருக்காக கிருஷ்ணா நீரை தெலுங்கு – கங்கை திட்ட கால்வாய் மூலம் கடந்த 19-ம் தேதி பகலில் ஆந்திர மாநிலம்-வெங்கடகிரி எம்எல்ஏ ராமகிருஷ்ணா திறந்து வைத்தார். தொடக்கத்தில் விநாடிக்கு 510 கன அடி என திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர், படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, திங்கள்கிழமை காலை முதல் விநாடிக்கு 1,300 கன அடி திறக்கப்பட்டு வருகிறது.

கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள கிருஷ்ணா நீர், 152 கி.மீ. தூரம் பயணித்து, தமிழக எல்லையான திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே தாமரைக்குப்பம் ஜீரோ பாயின்டுக்கு திங்கள்கிழமை காலை வந்தடைந்தது.

தொடர்ந்து, கிருஷ்ணா நீர், 25 கி.மீ. தூரம் பயணித்து திங்கள் கிழமை இரவு பூண்டி ஏரியை வந்தடைந்தது. பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு நூறு கன அடி அளவில் வந்து கொண்டிருப்பதாக தமிழக நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.