“சம்பாதிக்கச் சென்று வெளிநாடுகளில் பரிதவிக்கும் இந்திய இளைஞர்கள்” – ராகுல் காந்தி வேதனைப் பகிர்வு

புதுடெல்லி: ஹரியானா மாநிலம் உள்ளிட்ட நாட்டிலுள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை பறித்துக் கொண்டு, அவர்கள் வெளிநாடுகளுக்கு கொடூரமான பயணத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி, கடுமையான அநீதியை பாஜக இழைத்துள்ளது என்று ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை தனது எக்ஸ் பக்கத்தில், சமீபத்திய அமெரிக்க பயணத்தின் போது, ஹரியானாவில் இருந்து குடியேறிய சில குடும்பத்தினருடன் அவர் நடத்திய உரையாடல் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். மேலும் இந்தியில் வெளியிட்டுள்ள அந்தப் பதிவில், ஹரியானா இளைஞர்கள் ஏன் டங்கியாக மாறினார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். டங்கி என்பது ‘கழுதை விமானம்’ என்ற பொருளில் சட்டவிரோத குடியேற்றத்தை குறிக்கும் ஒரு பதம். இது கடந்த ஆண்டு ஷாருக்கான் நடிப்பில், ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் வெளியான படத்தின் மூலம் மிகவும் பிரபலமானது.

ராகுல் காந்தி தனது பதிவில், ‘பாஜக ஏற்படுத்தியுள்ள வேலையில்லா திண்டாட்டத்தின் விளைவுகளின் விலையை லட்சக்கணக்கான குடும்பங்கள் தங்களது அன்புக்குரியவர்களை பிரிந்து கொடுத்துக் கொண்டிருக்கின்றன. எனது சமீபத்திய அமெரிக்கப் பயணத்தின் போது, தங்களின் குடும்பத்தினரைப் பிரிந்து வெளிநாட்டில் சிரமப்பட்டு வரும் சில ஹரியானாவைச் சேர்ந்த இளைஞர்களைச் சந்தித்தேன்.

இந்தியா திரும்பியதும் அந்த இளைஞர்களின் குடும்பத்திரைச் சந்தித்தபோது அவர்களின் கண்களில் அவ்வளவு வலியைப் பார்த்தேன். வேலைவாய்ப்பின்மை சிறு குழந்தைகளை அவர்களின் தந்தையர்களிடமிருந்தும், முதியவர்களை வயதான காலத்தில் அவர்களுக்கான ஆதரவுகளிடமிருந்து பிரித்து வைத்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை பறித்ததன் மூலமாக ஹரியானா உள்ளிட்ட இந்தியாவில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் பாஜக அநீதி இழைத்துள்ளது. நம்பிக்கைகள் உடைந்து போன நிலையில், தோல்வியுற்ற மனதுடன் இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் சித்ரவதை பயணத்தை மேற்கொள்கின்றனர்.

தங்களின் வீடுகளை விட்டு வெளியேறியிருக்கும் இந்த புலம்பெயர்ந்த பறவைகளுக்கு, அவர்களின் சொந்த நாட்டிலேயே ஊதியம் ஈட்டுவதற்கு வாய்ப்பு கிடைத்திருந்தால், அவர்களின் அன்புக்குரியவர்களை விட்டுவிட்டு ஒரு போதும் தங்களின் தாயகத்தை விட்டு வெளியேறியிருக்க மாட்டார்கள். காங்கிரஸ் அரசு அமைந்தவுடன், தங்களின் கனவுகளை நினைவாக்க இளைஞர்கள் அன்புகுரியவர்களை பிரிந்து செல்ல வேண்டிய தேவை இல்லாத ஒரு அமைப்பை உருவாக்குவோம் என்பதே எங்களின் தீர்மானம்” என்று தெரிவித்துள்ளார்.

அவர் பகிர்ந்துள்ள வீடியோவில், ராகுல் காந்தி, ஹரியானாவில் இருந்து வந்து அமெரிக்காவில் பணியாற்றி வரும் இளைஞர்களுடன் உரையாடுகிறார். வெளிநாட்டில் வந்து வசிக்கும் அவர்களின் வேதனையைக் கேட்கிறார். அதேபோல் இந்தியா திரும்பியதும், அமெரிக்காவில் சாலை விபத்துக்குள்ளான இளைஞர் ஒருவரின் குடும்பத்தினரைச் சந்திக்கிறார். அடுத்த மாதம் 5-ம் தேதி ஹரியானாவுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த முறை ஆளும் பாஜகவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் தீவிரமாக இயங்கி வருகிறது. அதற்காக வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் பிரச்சினைகளை ஆளுங்கட்சிக்கு எதிராக முன்னிறுத்துகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.