சென்னை: ஹங்கேரி நாட்டில் உள்ள புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வரும்45-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி 2 பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. இதற்கு ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
ஆளுநர் ஆர்.என்.ரவி: உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியின் பொது மற்றும் மகளிர் பிரிவுகளில்தங்கம் வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். இந்த சாதனை இந்திய சதுரங்க அணிக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் மைக்கல்லாக அமையும். நமது விளையாட்டு வீரர்களின் உத்வேகம் ஒவ்வொரு இந்தியரிடமும் மகத்தான உணர்வை விதைத்துள்ளது. இதனால் பாரதம் ஓர் ஆற்றல்மிக்க விளையாட்டு வல்லரசாக உயர்ந்து பிரதிபலிக்கிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: சென்னையில் நாம் நடத்திக் காட்டிய செஸ் ஒலிம்பியாடைத் தொடர்ந்து, புடாபெஸ்டில் நடைபெற்று வரும் 45-வது செஸ் ஒலிம்பியாட்டில், இந்திய ஆண்கள் பிரிவு, பெண்கள் பிரிவு என இரண்டிலும் தங்கம்வெல்லும் அளவுக்கு இந்திய அணிபயணித்துள்ளது. எல்லைகளைத் தொடர்ந்து அகலப்படுத்தி, நமது செஸ் சாம்பியன்கள் உலக அரங்கில் நாட்டுக்குப் பெருமை தேடித் தருவதைக் காண்பது நெஞ்சுக்கு இதமளிக்கிறது. வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ள இந்திய அணிக்கு எனது பாராட்டுகள்.
விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்று சதுரங்கத்தில் தனது திறமையை மீண்டும்வெளிப்படுத்தியுள்ளது. இந்த வரலாற்று சாதனை மூலம் நமது இந்திய அணி ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பொது மற்றும்மகளிர் பிரிவில் தங்கம் வென்றுள்ள இந்திய அணியினருக்கு வாழ்த்துகள். செஸ் உலகின்தலைசிறந்த போட்டியில் நாட்டுக்குநம் அணியினர் பெரும்புகழைச் சேர்த்துள்ளது மெச்சத்தக்கது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இரட்டை தங்கம் வென்று, இந்திய சதுரங்க வரலாற்றில் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தி, அசாதாரண வெற்றியை நமது சதுரங்க விளையாட்டு வீரர்கள் பெற்றுள்ளனர். அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: புடாபெஸ்ட் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் தங்கத்தை கைப்பற்றி இந்திய அணி வரலாற்று சாதனை படைத்து தாய்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளது. சாதனைப் படைத்த செஸ் வீரர்களுக்கு வாழ்த்துகள்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கும் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிக்கு எனது பாராட்டுகள். நம் வீரர்களின் சாதனைப் பயணம் மென்மேலும் தொடரட்டும்.