நியூயார்க்: மெட்டா நிறுவனத்தின் ஏஐ சாட்பாட் அதன் பயனர்களுடன் நடிகைகள் ஜூடி டென்ச், கிறிஸ்டன் பெல், நடிகர் மற்றும் தொழில்முறை ரெஸ்லிங் வீரர் ஜான் சீனா ஆகியோரது குரலில் பேச உள்ளது. இது தொடர்பாக மெட்டா மற்றும் நடிகர்களின் தரப்பில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாட்-ஜிபிடி போல மெட்டாவின் ஏஐ சாட்பாட்டில் உள்ள வாய்ஸ் அம்சத்தின் மூலமாக அதன் பயனர்கள் சுமார் ஐந்து பிரபலங்களின் குரலை வாய்ஸ் அசிஸ்டன்ட் முறையில் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர பொதுவான குரல் வடிவிலும் இந்த வாய்ஸ் அம்சத்தை பயனர்கள் பயன்படுத்த முடியும்.
இது குறித்து அறிவிப்பு நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ள ஆண்டு விழா மாநாட்டில் மெட்டா அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதன் போது மெட்டா நிறுவனத்தின் ஃபர்ஸ்ட் வெர்ஷன் ஏஆர் கிளாஸும் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.
இந்த வாரத்தின் இறுதியில் மெட்டாவின் ஏஐ சாட்பாட்டில் இந்த வாய்ஸ் அம்சம் அறிமுகமாகும். முதலில் அமெரிக்கா மற்றும் ஆங்கில மொழி பரவலாக பேசும் நாடுகளில் இந்த அம்சம் வெளியாகும். தொடர்ந்து மற்ற நாடுகளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்டா கிளாஸை அணிந்து கொண்டு ஜான் சீனா நிகழ்த்திய ஸ்டன்ட் புரோமோவை கடந்த வாரம் மார்க் ஸூகர்பெர்க் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
மெட்டா ஏஐ: இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் மெட்டா நிறுவனத்தின் ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட்டான ‘மெட்டா ஏஐ’ அறிமுகம் ஆனது. இதனை வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் பயனர்களின் பயன்பாட்டுக்கு கிடைக்கிறது.
பயனர்கள் இதைக் கொண்டு மின்னஞ்சல் எழுத, கவிதை, மொழிபெயர்ப்பு, டெக்ஸ்டுகளை சுருக்கி தர, இமேஜ் மற்றும் GIF உருவாக்க என பல பணிகளை செய்யலாம். இது அனைத்தையும் பயனர்கள் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்தபடி மேற்கொள்ளலாம். கூகுள், மைக்ரோசாப்ட் வழங்கும் நிகழ்நேர சேர்ச் ரிசல்ட்களை பயனர்கள் இதில் பெற முடியும்.