சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 29-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று ஓரிரு இடங்களில் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும்.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய வங்கக் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இன்று வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தரைக்காற்று ஓரிரு இடங்களில் அதிகபட்சமாக மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் வீச்கூடும். 25, 26-ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், 27 முதல் 29-ம் தேதி வரை ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.