சென்னை மேற்கு தாம்பரம் ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் ராணி (பெயர் மாற்றம்) (24). பெங்களூரைச் சேர்ந்த இவர், சென்னையில் துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். அப்போது ராணிக்கும் அதே கடையில் பணியாற்றிய 17 வயது சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது காதலாக மாறியது. பின்னர் இருவரும் தாம்பரம் ரங்கநாதபுரத்தில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுவன், தன்னுடைய சொந்த ஊரான செஞ்சிக்குச் சென்றார். அதன்பிறகு அவன் சென்னைக்கு திரும்பி வரவில்லை.
அதனால் ராணி, செஞ்சிக்குச் சென்றார். அங்கு சிறுவனின் பெற்றோரிடம் திருமணம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது சிறுவனுக்கு 17 வயதாகுவதால் திருமணம் செய்து கொடுக்க முடியாது என அவனின் பெற்றோர் தெரிவித்தனர். அதனால் மனவேதனையடைந்த ராணி, சென்னை வந்தார். பின்னர் சமூகவலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அதில் அவன் இல்லாத வாழ்க்கை தேவையில்லை எனக் கூறி தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என கூறியிருந்தார். இந்த வீடியோவைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் தாம்பரம் காவல் நிலையத்துக்கும் வீடியோ குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், ராணி தங்கியிருந்த வீட்டுக்கு வந்தனர். அப்போது அவர் வீட்டுக்குள் சடலமாக கிடந்தார். இதையடுத்து அவரின் சடலத்தை கைப்பற்றிய போலீஸார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ராணியின் மரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.