முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் முக்கிய ஆன்மீக ஸ்தலமாக விளங்குகிறது. கடற்கரையில் இருந்து திருக்கோயில் 67 மீட்டர் தொலைவிலும், ராஜகோபுரம் 140 மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி கும்பாபிஷேகம் செய்யப்பட்டு தற்போது 15 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், வரும் 2025-ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இக்கோயிலில் கடந்த 2 ஆண்டுகளாக ஹெச்.சி.எல்., நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி செலவில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடந்து வருகிறது.
இதோடு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.100 கோடி செலவில் கும்பாபிஷேகத் திருப்பணிகளும் நடந்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக 137 அடி உயரமும், 9 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ராஜகோபுரத்தின் மேல் பகுதியில் உள்ள 9 கலசங்கள் ஆகம விதிப்படி பூஜை செய்யப்பட்டு தனியாக பிரித்து கழற்றி கீழே கொண்டுவரப்பட்டது. கடந்த 1983-ம் ஆண்டு நடந்த கும்பாஷேகத் திருப்பணியின் போது 9 கலசங்களும் கீழே இறக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.
41 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கீழே இறக்கப்பட்ட 9 கலசங்கள், ராஜகோபுரக் கீழ்பகுதியில் வைத்து புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த கும்ப கலசங்களை பண்ருட்டியைச் சேர்ந்த ஸ்தபதி சரவணன் என்பவர் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் ஏழே முக்கால் அடி உயரம் கொண்ட செம்புகளால் ஆன கலசத்தில் 11 அடுக்குகள் உள்ளன. இதில் வாழைப்பூ, சூரியப் பூ-2, சூரியப் பூ தட்டு, மேல்பகுதி அரடா-2, கீழ்ப்பகுதி அரடா-2, குடம் மேல்பகுதி, குடம் கீழ்ப்பகுதி, பத்ம பீடம் என 11 அடுக்குகள் உள்ளன.
மொத்தமுள்ள 9 கலசங்களை புதுப்பிக்கும் பணி இன்னும் இரண்டு மாதத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் கலசங்களில் உள்ள அழுக்கு தனியாக பிரித்து எடுக்கப்பட்டு, பழுது பார்க்கப்பட்டு புதுப்பிக்கும் பணிகள் நடக்கிறது. கோபுரக் கலசங்களின் 11 அடுக்குகளின் நடுவில் முற்காலத்தில் தேக்கு மரக்கட்டைகளால் இணைக்கப்பட்டிருந்தது. தற்போது கருங்காலிக் கட்டைகள் மூலம் இணைக்கப்பட உள்ளது. இப்பணிகளை திருக்கோயில் தக்கார் அருள்முருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.