குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் பற்றிய செய்திகள் வெளியாகும்போதெல்லாம், மக்கள் மனதில் அச்ச ரேகைகள் படர்கின்றன. அதைப் போக்க வேண்டிய பொறுப்பு, காவல்துறையுடையதே. ஆனால், சென்னை மாநகரக் காவல்துறையினர் ஒரு போக்சோ வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரையே தாக்கியிருப்பது, அச்ச ரேகைகளை அதிகப்படுத்தியிருக்கிறது.
பாதிக்கப்பட்ட அந்த 10 வயதுச் சிறுமியின் ஏழைத் தந்தையை, குற்றம் சுமத்தப்பட்ட பக்கத்து வீட்டு இளைஞரின் முன்னிலையிலேயே தாக்கியிருக்கிறார், அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜி. அதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வீடியோ வெளியிட, அது செய்தியாக, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது சென்னை உயர் நீதிமன்றம். அதைத் தொடர்ந்தே இரண்டு வாரங்களுக்குப் பின் கைது செய்யப்பட்டார், குற்றம் சுமத்தப்பட்ட இளைஞர்.
ஒருவேளை அந்த வீடியோ வெளியிடப்படவில்லையென்றால்..? இன்னும் எத்தனை காவல் நிலையங்களில் இத்தகைய கொடூரங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன என்பதை நினைத்தாலே பகீரிடுகிறது.
போக்சோ சட்டத்துக்கு முன் இந்தியா, பின் இந்தியா என்று அலசும் அளவுக்கு பாலியல் குற்றங்களில் புகார்கள் பதிவுக்கு வருவது, காலம் காலமாக இருட்டில் இருந்த இவ்வகைக் குற்றவாளிகள் வெளிப்படுத்தப்படுவது, தண்டனைகள் வழங்கப்படுவது என இச்சட்டம் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. அதேசமயம், இச்சட்டத்தில் உள்ள பிரச்னைகளும் பேசப்பட்டே ஆக வேண்டும்.
குற்றம் சுமத்தப்பட்டவர்களை காவல்துறை `காப்பாற்ற’ நினைத்துவிட்டால் பாதிக்கப்பட்டவர்கள் மீதே அதிகாரத்தை ஏவும் அராஜகம் நிறையவே நடக்கிறது. பல வழக்குகளில், முதற்கட்ட விசாரணையில் ஆய்வாளர்களும், நீதிமன்ற விசாரணையில் அரசு வழக்கறிஞர்களும் காட்டும் மெத்தனம்… தண்டனைக்கு உரியவர்களை எளிதாகத் தப்பிக்க வைக்கிறது. 2021-ம் ஆண்டு, போக்சோ வழக்கு ஒன்று தொடர்பான மேல்முறையீட்டில், ‘பேன்ட் ஜிப்பை திறப்பது போக்சோ வழக்கின் கீழ் வராது’ என்று மும்பை உயர் நீதிமன்றத்தின் அதிர்ச்சித் தீர்ப்பையும் பார்த்தோம்.
அனைத்து மாவட்டங்களிலும் போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற அரசின் இலக்கு இன்னும் எட்டப்படவில்லை. அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களிலும் அதிகபட்சம் ஒரு வருடத்திற்குள் வழக்கை முடிக்க வேண்டும் என்பதைச் செயல்படுத்த முடியாத அளவுக்கு வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. இத்தகைய சூழலில், குழந்தைகளுக்கான நீதியை எங்கிருந்து, எப்படித்தான் பெறுவதோ?
‘சட்டம் போடுவது, பெருமையடித்துக் கொள்வதற்கல்ல… செயல்படுத்துவதற்கு’ என்பதை அரசுக்கு உரக்கச் சொல்வோம் தோழிகளே!
உரிமையுடன்,
ஸ்ரீ
ஆசிரியர்