பெங்களூரு: முடா ஊழல் விவகாரத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், பாஜகவின் பழிவாங்கும் அரசியலுக்கு எதிரான போராட்டம் வெற்றி பெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் சித்தராமையா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு: உயர் நீதிமன்ற உத்தரவின் அம்சங்களை ஊடகங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். ஆர்டர் நகலைப் படித்த பிறகு விரிவான பதிலைத் தருகிறேன். பிரிவு 218ன் கீழ் ஆளுநர் பிறப்பித்த உத்தரவை நீதிமன்றம் முற்றாக நிராகரித்தது. ஆளுநரின் உத்தரவின் 17ஏ பிரிவுக்கு மட்டுமே நீதிபதிகள் தங்களை மட்டுப்படுத்திக் கொண்டனர். இதுபோன்ற விசாரணைக்கு சட்டப்படி அனுமதி உள்ளதா இல்லையா என்பதை நிபுணர்களுடன் கலந்தாலோசிப்பேன். சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசி சட்டப் போராட்டம் நடத்துவது குறித்து முடிவு எடுப்பேன்.
பிரிவு 218 BNSS, 17A மற்றும் 19PC சட்டத்தின் கீழ் விசாரணை மற்றும் வழக்குத் தொடர புகார்தாரர் அனுமதி கோரினார். இருப்பினும், 19 பிசி சட்டத்தின்படி வழக்குத் தொடர ஆளுநர் முதலில் அனுமதி மறுத்துவிட்டார். பிஎன்எஸ்எஸ் பிரிவு 218ன் கீழ் வழக்குத் தொடர ஆளுநர் வழங்கிய அனுமதியை நீதிமன்றம் வெளிப்படையாக நிராகரித்தது. இன்னும் சில நாட்களில் உண்மை வெளிவரும் என்றும், 17ஏ-யின் கீழ் விசாரணை ரத்து செய்யப்படும் என்றும் நான் நம்புகிறேன்.
இந்த அரசியல் போராட்டத்தில் மாநில மக்கள் என் பின்னால் உள்ளனர். அவர்களுடைய ஆசீர்வாதமே எனக்குப் பாதுகாப்பு. நான் சட்டம் மற்றும் அரசியலமைப்பின் மீது நம்பிக்கை கொண்டுள்ளேன். இந்தப் போராட்டத்தில் உண்மையே வெற்றி பெறும். இது நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு எதிரான போராட்டம். பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் இந்த பழிவாங்கும் அரசியலுக்கு எதிரான எங்கள் நீதிப் போராட்டம் தொடரும். நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.
எங்கள் கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்கள், தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் காங்கிரஸ் மேலிடம் எனக்கு ஆதரவாக நின்று சட்டத்திற்கான போராட்டத்தை தொடர ஊக்குவித்துள்ளனர். நான் ஏழைகளுக்கு ஆதரவாகவும், சமூக நீதிக்காகவும் போராடி வருவதால், பா.ஜ.க மற்றும் ஜே.டி.எஸ்., என் மீது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன.
எனது 40 ஆண்டுகால அரசியல் வாழ்வில், இதுபோன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளையும், சதி அரசியலையும் சந்தித்து மாநில மக்களின் ஆசிர்வாதத்தாலும், வாழ்த்துகளாலும் வெற்றி பெற்றுள்ளேன். மக்களின் ஆசீர்வாதத்துடன் இந்தப் போராட்டத்திலும் வெற்றி பெறுவேன் என்று உறுதியாக நம்புகிறேன். மூடா வழக்கு உண்மை இல்லாதது. பாஜக மற்றும் ஜேடிஎஸ் கட்சிகளின் முக்கிய நோக்கம் ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருக்கும் எங்கள் அரசின் திட்டங்களை நிறுத்துவதே ஆகும்.
நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேட்கும் இதே தலைவர்கள்தான், மாநிலத்தில் ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நான் செயல்படுத்திய திட்டங்களை எதிர்த்தார்கள். நான் முதல் முதலமைச்சராக இருந்தபோது செயல்படுத்தப்பட்ட அன்னபாக்யா, வித்யாஸ்ரீ, இந்திரா கேன்டீன் உள்ளிட்ட திட்டங்களை எதிர்த்தனர். தனித்து ஆட்சிக்கு வரும் அளவுக்கு பாஜகவுக்கு கர்நாடக மக்கள் பெரும்பான்மையை வழங்கவில்லை. இதுவரை ஆபரேஷன் கமலா நடத்தி, நெறிமுறையற்ற முறையில், பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் ஆபரேஷன் கமலாவுக்கு வாய்ப்பளிக்காமல் 136 உறுப்பினர் பலத்தை எங்கள் கட்சிக்கு மாநில மக்கள் அளித்தனர். இதனால் விரக்தியடைந்த பாஜக மற்றும் ஜேடிஎஸ் தலைவர்கள், ஆளுநர் மாளிகையை தவறாகப் பயன்படுத்தி, எங்கள் அரசை சீர்குலைக்க என் மீது பொய் வழக்குகளை போட்டுள்ளனர். நாடு முழுவதும் ராஜ்பவனை முறைகேடாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகளின் அரசை தண்டிக்கும் சதியை நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. என் விஷயத்தில் பாஜகவும், ஜேடிஎஸ்ஸும் இவ்விஷயத்தில் சங்கடத்தை நிச்சயம் சந்திக்கும். வாய்மையே வெல்லும் என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.