லெபனான்: ஹிஸ்புல்லா இயக்கத்தினரைக் குறிவைத்து லெபனான் நாட்டில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் செவ்வாய்க்கிழமை வரை 58 பெண்கள், 35 குழந்தைகள் உட்பட 492 பேர் உயிரிழந்தனர்.1600-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்தத் தாக்குதல் பெரும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், போர்ப் பதற்றத்தைத் தணிக்கவும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். திங்கள்கிழமை தொடங்கி செவ்வாய்க்கிழமை வரை தொடர்ந்த தாக்குதலால், கடந்த 1975-90 உள்நாட்டு போருக்கு பின்னர் லெபனானில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பு இதுதான். வாசிக்க > இஸ்ரேல் தீவிர தாக்குதல்: லெபனானில் இதுவரை 50 குழந்தைகள் உள்பட 558 பேர் பலி. இந்த நிலையில், இந்தத் தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் எதிர்வினையாற்றி உள்ளனர். அதன் விவரம்:
ஐ.நா.பொதுச் செயலாளர்: லெபனான் மீதான தாக்குதல் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ், “நீலக்கோடு வழியாக (இஸ்ரேல் லெபனானைப் பிரிக்கும் எல்லைக் கோடு) அதிகரித்து வரும் சூழ்நிலை பெரும் பீதியை ஏற்படுத்துகிறது. அங்கு அதிக அளவிலான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்” என்று வேதனை தெரிவித்துள்ளார். ஐ.நா. பொதுச் செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபென் துஜார்ரிக் கூறுகையில், “தெற்கு லெபனான் மற்றும் வடக்கு இஸ்ரேல் பகுதிகளில் பணியாற்றும் ஐ.நா.சபை ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து ஐ.நா. தலைவர் மிகுந்த கவலையில் உள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
யுனிசெஃப் தலைவர் தேத்தரின் ரஸ்ஸல், “அதிகரித்து வரும் ஆபத்து எண்ணற்ற குழந்தைகளை அச்சுறுத்தியுள்ளது. வான்வழி மற்றும் ராக்கெட் தாக்குதல்கள் மற்றும் இடமாற்றம் காரணமாக குழந்தைகளிடம் மனரீதியிலான பாதிப்புகளுக்கான எச்சரிக்கைகள் அதிகரித்துள்ளன. உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் அமைதிக்கு வழிவகுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
ஈரான்: ஹிஸ்புல்லாக்களின் நட்பு நாடாக அறியப்படும் ஈரான், ஒரு முழு அளவிலான போரினை தூண்ட இஸ்ரேல் விரும்புவதாக குற்றம் சாட்டியுள்ளது. ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், “நாங்கள் அமைதியாக வாழ விரும்புகிறோம், நாங்கள் போரை விரும்பவில்லை. இந்த அனைத்து மோதல்களையும் இஸ்ரேலே உருவாக்குகிறது. மத்திய கிழக்கில் ஒரு முழு அளவிலான போர் உருவானால், அது உலகின் எந்த ஒரு நாட்டுக்கும் பலன் அளிக்காது. இதனை மற்ற யாரை விடவும் நாங்கள் நன்றாக அறிவோம்” என்று தெரிவித்துள்ளார்.
ஜோர்டான் வெளியுறவு அமைச்சர் அய்மன் சாஃபதி, இஸ்ரேலை ஆக்கிரமிப்பாளர் என்று தாக்கியுள்ளார். மேலும், “இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை தடுப்பதற்கு ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்” என்றார்.
எகிப்து: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ்களுக்கு இடையே முக்கியமான மத்தியஸ்தராக எகிப்து உள்ளது. அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம், ‘இது பிராந்திய அளவிலான போருக்கு இந்தத் தாக்குதல் தூண்டுகிறது. உடனடியாக ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளது.
கத்தார்: கத்தார் அரசு, “இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எந்தத் தடையும் இல்லாதது, தொடர்ந்து சர்வதேச சட்டங்களை மீறும்போதும் அதற்கான தண்டனை இல்லாததே இந்த நிலைமைகளுக்கு காரணம். தற்போது உள்ள யதார்த்த நிலை, இந்தப் பிராந்தியத்தை படுகுழியின் விளிம்பில் நிறுத்தி பதற்றத்தை அதிகரித்துள்ளது. இது இந்தப் பிராந்தியத்துக்கும் சர்வதேச நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று கடுமையாக கண்டித்துள்ளது.
சவுதி அரேபியா: லெபனானில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை மிகுந்த கவலையுடன் கண்காணித்து வருகிறோம். அனைத்து தரப்பினரும் மிகுந்த கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம்: இந்தத் தாக்குதலுக்கு வளைகுடா நாடுகள் ஆழந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், வன்முறை, அத்துமீறல், கட்டுப்பாடற்ற நடவடிக்கை, அரசுகளுக்கிடையேயான உறவுகள் மற்றும் இறையாண்மைக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிரான தங்களின் நிலைப்பாடுகளை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்கா: காசா போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேலுக்கு மில்லியன் டாலர் அளவிலான ஆயுத உதவிகளைச் செய்துள்ள அமெரிக்கா, இரண்டு நாடுகளும் போர் நிறுத்தத்துக்கு முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது. மேலும், இரண்டு தரப்புகளும் போரில் இருந்து பின்வாங்கும் என்று நம்பிக்கையும் வைத்துள்ளது. எங்களுடைய குழுக்கள் அவர்கள் சகாக்களுடன் தொடந்து தொடர்பில் இருக்கிறார்கள். மேலும், மக்கள் பாதுகாப்பாக அவர்களின் வீடுகளுக்கு திரும்பும் வகையில் போர் நிறுத்த பணிகளில் ஈடுபட்டு வருகிறோம் என்று அமெரிக்க அதிபர் ஜே பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 40 ஆயிரம் துருப்புகள் அந்தப் பிராந்தியத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜி7 நாடுகள்: கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான ஜி7 அமைப்பு, தற்போது நிலவும் அழிவுக்கான சுழற்சியை நிறுத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளது. மேலும், இது முழு மத்திய கிழக்கு பகுதியையும் கற்பனை செய்து பார்க்க முடியாத பெரிய அளவிலான பிராந்திய போருக்கு ஈட்டுச் செல்லும். ஒரு நடவடிக்கையும் அதற்கான எதிர்வினைகளும் இந்த வன்முறை சுழற்சியை மேலும் பெரிதாக்கும் அபாயம் உள்ளது என்று எச்சரித்துள்ளது.
பிரிட்டன்: பிரிட்டனின் வெளியுறவுச் செயலாளர் டேவிட் லாம்மி, “இந்த வன்முறை மேலும் அதிகரிப்பது மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கும். இருதரப்புகளும் உடனடி போர் நிறுத்தத்தில் ஈடுபடவேண்டும் என்று நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய கூட்டமைப்பு: வெளியுறவு கொள்கைத் தலைவர் ஜோசப் போர்வெல், “நாம் ஒரு முழு அளவிலான போரில் இருக்கிறோம். பொதுமக்களின் உயிரிழப்பு, இஸ்ரேலின் அதிகரித்து வரும் தாக்குதல்கள் எல்லாம் போருக்கான சூழல் இல்லையென்றால் இதை வேறு எப்படி கூறுவீர்கள். போர் நிறுத்ததுக்கான வேலையை இங்கே நியூயார்க்கில் உள்ளவர்கள் தொடங்க வேண்டும். போருக்கு வழிநடத்தும் இந்தப் போக்கை நிறுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் முழு அளவில் ஈடுபட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
பிரான்ஸ் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜேன் நோயல் பார்ரோட், “இஸ்ரேலின் தாக்குதலால் அதிக அளவிலான குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இறந்துள்ள நிலையில், நான் லெபனான் மக்களை பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறேன். இந்தத் தாக்குதல்கள் நீலக்கோட்டின் இரண்டுபுறமும் நடத்தப்பட்டுள்ளன. இவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
பெல்ஜியம் நாட்டின் துணை பிரதமர் பெட்ரா டி ஷட்டர், “இஸ்ரேஸ் தாக்குதலால் லெபனானில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளைப் பற்றி கேட்டதும் நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இஸ்ரேலின் இந்த தாக்குதலால் அந்தப் பிராந்தியத்தில் இந்த பிராந்தியத்தில் எந்த தீர்வுக்கும் வழிவகுக்காது. பேச்சுவார்த்தை மூலமே மக்களை நாம் பாதுகாப்பாக திரும்ப அழைத்து வர முடியும். இந்த துன்பங்களுக்கு போர் நிறுத்தம் மட்டுமே தீர்வு தரும்” என்று தெரிவித்துள்ளார்.
சீனா: லெபனானின் இறையாண்மையை பாதுகாப்பதில் உறுதியான ஆதரவை அளிப்பதாகவும், இஸ்ரேலின் தாக்குதலை கடுமையாக கண்டிப்பதாகவும் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.
ரஷ்யா: இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையில் நடக்கும் மோதல் தீவிரமடைந்து வருவது பிராந்தியத்தில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.