புதுடெல்லி: மன அழுத்த மேலாண்மை பற்றி சொல்லித் தர வேண்டும் என கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தி உள்ளார்.
கடந்த ஆண்டு கணக்கு தணிக்கையாளர் (சிஏ) தேர்வில் வெற்றிபெற்றவர் அன்னா செபாஸ்டியன் பேராயில் (26). இவர் எர்ன்ஸ்ட் யங் இந்தியா (இஒய்) நிறுவனத்தின் புனே நகரில் உள்ள அலுவலகத்தில் கடந்த 4 மாதங்களாக பணியாற்றி வந்தார். கடந்த ஜூலை மாதம் அவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
இந்நிலையில், அன்னாவின் தாய் இஒய் இந்தியா நிறுவன தலைவர் ராஜீவ் மேமானிக்கு எழுதிய கடிதத்தில், “எனது மகள்முதுகெலும்பை உடைக்கும் அளவுக்கு அதிக வேலைப் பளுவைஎதிர்கொண்டுள்ளார். இதனால் அவள் உடல் ரீதியாக, உணர்ச்சிரீதியாக, மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தாள். இதுவே அவள் மரணத்துக்கு காரணமாக அமைந்தது” என கூறியிருந்தார்.
இந்நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் கடந்த 21-ம் தேதி நடைபெற்ற நிகழச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: நன்றாக படித்து சிஏ படிப்பில் தேர்வான ஒரு பெண், பணிச் சுமையால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக உயிரிழந்துவிட்டதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது.
எனவே, மாணவர்களை கல்வி ரீதியாக தயார்படுத்தும் கல்வி நிறுவனங்கள், அவர்களுக்கு வாழ்க்கைப் பாடங்களையும் குறிப்பாக மன அழுத்த மேலாண்மை குறித்தும் சொல்லித் தர வேண்டியது அவசியம். இதுபோல, எதைப் படித்தாலும், எந்த வேலை செய்தாலும் மன அழுத்தத்தை கையாள்வதற்கான மன வலிமை இருக்க வேண்டும் என்று தங்கள் பிள்ளைகளுக்கு பெற்றோர் சொல்லித் தர வேண்டும். கடவுளை நம்புங்கள், கடவுளின் அருள் நமக்கு வேண்டும். கடவுளைத் தேடுங்கள், நல்லஒழுக்கத்தை கற்றுக் கொள்ளுங்கள். இதிலிருந்துதான் உங்கள் ஆத்ம சக்தி வளரும். ஆத்ம சக்தி வளர்ந்தால்தான் மன வலிமை கிடைக்கும்.
மன வலிமை கிடைக்கும்: மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் அழுத்தங்களை எதிர்கொள்ளும் வகையில், கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் தெய்வீகம் மற்றும் ஆன்மிகத்தையும் பாடதிட்டங்களில் சேர்க்க முன்வர வேண்டும். அப்போதுதான் மாணவர்களுக்கு மன வலிமை கிடைக்கும். இது அவர்களுடைய முன்னேற்றத்துக்கு மட்டுமல்லாமல் நாட்டின் முன்னேற்றத்துக்கும் உதவும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் எக்ஸ் சமூக வலைதளத்தில், “மன அழுத்தத்தை நிர்வகிக்க பெற்றோர் சொல்லித் தர வேண்டும் என நிதியமைச்சர் கூறுகிறார். இது உயிரிழந்த அன்னா செபாஸ்டியனையும் அவரதுபெற்றோரையும் குற்றம்சாட்டுவது போல் உள்ளது. இதுபோல பாதிக்கப்பட்டவர்களை குற்றம்சாட்டுவது கண்டிக்கத்தக்கது.
இதுபோன்ற கருத்துகளால், ஒருவருக்கு ஏற்படும் கோபத்தையும் வெறுப்பையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மாறாக, கார்ப்பரேட் நிறுவனங்களின் நச்சுத்தன்மை கொண்ட பணிச்சூழல் குறித்து ஆராய அவர் உத்தரவிட்டிருக்க வேண்டும். அத்துடன்ஊழியர்கள் நலனை பாதுகாக்கும் சீர்திருத்தங்களை மேற்கொண்டிருக்க வேண்டும்” என பதிவிட்டுஉள்ளார்.