புதுடெல்லி: கர்நாடக முதல்வர் சித்தராமையா உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், சுதந்திரமான விசாரணை நடைபெற வழி வகுக்க வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகர், “காங்கிரஸ் கட்சியின், ராகுல் காந்தியின் பாரம்பரியத்தை கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் தொடர்கிறார். ஏழைகளின் பெயரைச் சொல்லி ஆட்சிக்கு வருவது, பொய்யான வாக்குறுதிகளை அளிப்பது, இறுதியில் தங்களையும், தங்கள் குடும்பத்தையும் வளப்படுத்திக்கொள்வது – இதுதான் காங்கிரஸின் பாரம்பரியமாக உள்ளது.
முடா ஊழல் விவகாரம் தொடர்பாக தன்னிடம் விசாரணை நடத்த ஆளுநர் வழங்கிய அனுமதியை எதிர்த்து கர்நாடக முதல்வர் சித்தராமையா தொடர்ந்த வழக்கை, அம்மாநில உயர் நீதிமன்றம் இன்று (செப். 24) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கான ஆளுநரின் அனுமதியை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இந்த நிலையில், முதல்வர் சித்தராமையாவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் சுதந்திரமான முறையில் விசாரிக்கப்பட வேண்டியது மிகவும் முக்கியம். இதற்கு வழி வகுக்கும் வகையில் முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என்று பாஜக வலியுறுத்துகிறது.
பதவியில் இருக்கும் ஒரு முதல்வர், தன்னையும், தன் குடும்பத்தையும் வளப்படுத்திக்கொள்ள தனது அலுவலகத்தை எப்படித் தவறாகப் பயன்படுத்தினார் என்பதற்கு முடா வழக்கு அவமானகரமான உதாரணம்” என விமர்சித்தார்.
முன்னதாக, முடா ஊழல் விவகாரம் தொடர்பாக தன்னிடம் விசாரணை நடத்த ஆளுநர் வழங்கிய அனுமதியை எதிர்த்து கர்நாடக முதல்வர் சித்தராமையா தொடர்ந்த வழக்கை, அம்மாநில உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி எம்.நாகபிரசன்னா, “முடா வழக்கு தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதற்காக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆளுநர் அதற்கு அனுமதி அளித்துள்ளார். இதில் எந்த தவறும் இல்லை.
ஆளுநர் அனுமதி வழங்கியதை எதிர்த்து தாக்கல் செய்த முதல்வர் சித்தராமையாவின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. புகார் குறித்து சந்தேகத்திற்கு இடமின்றி விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம். ஏனெனில், முதல்வரின் நடவடிக்கையால் பலன் பெற்றவர்கள் வெளியாட்கள் அல்ல. முதல்வர் சித்தராமையாவின் குடும்ப உறுப்பினர்களே. சித்தராமையாவுக்கு எதிரான விசாரணைக்கு அனுமதி அளித்த ஆளுநரின் உத்தரவு எந்த விதத்திலும் உள்நோக்கம் கொண்டதல்ல. எனவே, சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கான ஆளுநரின் அனுமதியை நீதிமன்றம் உறுதி செய்கிறது.” என்று தீர்ப்பளித்தார்.