லெபனான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்: உயிரிழப்பு எண்ணிக்கை 500-ஐ நெருங்கியதால் அதிர்ச்சி

பெய்ரூட்,

லெபனானில் புதிதாக இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 492 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெண்கள், குழந்தைகளும் அடங்குவர். மேலும், 1,200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. போர்ப் பதற்றம் மென்மேலும் வலுத்துள்ளதால், தெற்கு லெபனானில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர்.

தெற்கு துறைமுக நகரமான சிடோனில் உள்ள பிரதான நெடுஞ்சாலையில் பெய்ரூட் நோக்கி செல்லும் பகுதியில் கார்கள் நிரம்பியுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு, அப்பகுதியில் உள்ள பள்ளிகள் அனைத்தும் மாற்று இடங்களாக மாற்றப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே லெபனான் பொதுமக்கள் பயன்படுத்தும் செல்போன்களில் இஸ்ரேல் எஸ்.எம்.எஸ்.களை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. அதில் குறிப்பிட்ட வரைபடத்தை பகிர்ந்துள்ளதாகவும், அங்கு ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயுதங்கள் இருப்பதாகவும், எனவே அங்கெல்லாம் குண்டு வீசப்போகிறோம் என்றும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழலில் இஸ்ரேல் ராணுவம் மற்றும் லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது.

முன்னதாக கடந்த 17-ம் தேதி ஹிஸ்புல்லா இயக்கத்தினர் பயன்படுத்திய 5 ஆயிரம் பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின. இதில் பலர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது மிகப் பெரிய அளவில் தாக்குதல் நடத்துவோம் என்று ஹிஸ்புல்லா அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்து. இதனைத் தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பு லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கத்தினரைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. லெபனானின் தலைநகர் பெரூட்டில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பலர் உயிரிழந்தனர். நேற்று நடத்தப்பட்ட தாக்குதல்களில் 1,300 இலக்குகளை தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், லெபனானில் புதிதாக இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 500-ஐ நெருங்கி உள்ளது. இதன்படி 35 குழந்தைகள் உட்பட 492 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1,200 பேர் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே பெய்ரூட் தாக்குதலுக்குப் பிறகு உயர் தளபதி உயிருடன் இருப்பதாகவும், அவர் தற்போது பாதுகாப்பான இடத்தில் உள்ளதாகவும் ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

தெற்கு லெபனானில் கிராமங்கள், நகரப் பகுதிகள் உள்பட பல இடங்களை ஹிஸ்புல்லா ஆயுதக் கிடங்குகளாக பயன்படுத்தி வருவதாக இஸ்ரேல் தெரிவித்திருந்தது. ஹிஸ்புல்லா அமைப்பின் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்த உள்ள நிலையில், லெபனானில் உள்ள மக்கள் உடனடியாக தங்கள் வீடுகள் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களைச் சேமித்து வைத்திருப்பதாகக் கூறப்படும் கட்டிடங்களை விட்டு வெளியேறுமாறு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.