புதுடெல்லி: கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் வக்புவாரிய சட்ட திருத்த மசோதாமக்களவையில் அறிமுகப்படுத்தப் பட்டது. இதற்கு கிளம்பிய கடும் எதிர்ப்பால் அந்த மசோதா, நாடா ளுமன்றக் கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.
இக்குழுவின் சார்பில் நாடுமுழுவதிலும் சம்பந்தப்பட்ட வர்கள், பொதுமக்கள் உள்ளிட்டபல்வேறு அமைப்பினரிடம் இ-மெயில்கள் மூலம் கருத்துகள் கேட்கப்படுகின்றன. இதற்கு சுமார் 1.2 கோடி மெயில்கள் ஜேபிசிக்கு இதுவரை வந்துள்ளன. இவற்றில் சுமார் 75,000 மெயில்கள் மசோதாவுக்கு ஆதரவாக உரியஆவணங்களுடன் அனுப்பப்பட்டுள்ளன. மற்ற அனைத்து இ- மெயில்களிலும் திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’நாளேட்டிடம் நாடாளுமன்ற அதிகாரிகள் கூறும்போது, ‘‘எதிர்பாராதஅளவில் இ-மெயில் கருத்துகள் ஜேபிசியிடம் குவிந்துள்ளன.வரும் 26-ம் தேதி முதல்நாட்டின் ஐந்து முக்கிய நகரங்களுக்கு பயணித்து ஜேபிசி, சம்பந்தப்பட்டவர்களுடன் கருத்து கேட்புக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன’ என தெரிவித்தனர்.
வரும் 26-ம் தேதி முதல் ஜேபிசி குழு 5 நாட்கள் பயணம் மேற்கொள்கிறது. 26-ம் தேதி மும்பை, 27-ல் அகமதாபாத், 28-ல் ஹைதராபாத், 30-ல் சென்னை, அக்.1-ல் பெங்களூரூவிலும் கூட்டம் நடைபெற உள்ளது. டெல்லியின் நாடாளுமன்ற அரங்கில் வாரம் 3 நாள் என ஜேபிசி கூட்டங்கள் தீவிரமாக நடைபெறுகின்றன. பாஜகவின் மூத்த எம்பியான ஜெகதாம்பிகா பால் தலைமையிலான ஜேபிசியில் அன்றாடம் பல காரசாரமான விவாதங்கள் நடைபெறுகின்றன.
சிறுபான்மையினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் ஜேபிசியில் இடம்பெற்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையின்மொத்தம் 31 உறுப்பினர்கள்முன்பு மசோதாவுக்கு ஆதரவான வாதங்களை முன்வைக்க உள்ளனர். தமிழகம் சார்பில் திமுகவின் ஆ.ராசா மற்றும் அப்துல்லாவும், திரிணமூல் காங்கிரஸில் கல்யாண் பானர்ஜி, முகம்மது நதீமுல் ஹக் ஆகியோரும், ஏஐஎம்ஐஎம் கட்சியின் அசாதுதீன் ஒவைசி ஆகியோர் இந்த மசோதாவுக்கு கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். இந்த மூன்று கட்சி எம்பிக்களும் சட்டமேற்கோள்களை காட்டி கடுமையான எதிர்ப்புகளைப் பதிவுசெய்து வருகின்றனர். இவர்களுக்கு காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி உள்ளிட்ட சில கட்சிகளின் எம்பிக்கள் ஆதரவுக் குரல் கொடுப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.