நியூயார்க்: மனிதர்களை செவ்வாய் கிரகத்தில் குடியேறச் செய்வது குறித்து பல்வேறு தருணங்களில் எலான் மஸ்க் பேசி உள்ளார். இந்நிலையில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்துக்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஐந்து ஸ்டார்ஷிப்களை அனுப்பும் திட்டம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
“மனிதர்களை செவ்வாய்க்கு அனுப்பும் நோக்கில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஐந்து ஆளில்லா ஸ்டார்ஷிப்களை அனுப்பும் திட்டம் உள்ளது. இந்த மிஷனில் ஸ்டார்ஷிப் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கினால் நான்கு ஆண்டுகளில் மனிதர்கள் அங்கு செல்வார்கள். அப்படி இல்லாத பட்சத்தில் அங்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் மேலும் இரண்டு ஆண்டுகள் தாமதம் ஆகும்.” என அவர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு சமயங்களில் தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘Mars மிஷன்’ குறித்து மஸ்க் வெளிப்படையாக பேசியுள்ளார். முன்பு ஆளில்லா விண்கலனை செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறக்க எப்படியும் ஐந்து ஆண்டுகள் ஆகும் என தெரிவித்திருந்தார். கடந்த ஜூன் மாதம் ஸ்டார்ஷிப்பின் வெற்றிகர ஸ்பேஸ் ரிட்டன் சோதனைக்குப் பிறகு தனது நிலைப்பாட்டை மஸ்க் மாற்றிக் கொண்டார்.
பூமியை கடந்து பிற கோள்களில் பல்வேறு ஆராய்ச்சி பணிகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் செவ்வாய் கிரகத்தில் பெரும்பாலான நாடுகளுக்கு ஒரு கண் உள்ளது. குறிப்பாக அங்கு மனிதர்கள் உயிர் வாழக்கூடிய சாத்தியம் உள்ளதா என்பது குறித்த ஆராய்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியில் அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. அதே நேரத்தில் மனிதர்களை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பும் சாத்தியம் குறித்து பேசி வருகிறது எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.