அதிகரித்த சட்டம் ஒழுங்கு பிரச்னை!
கடந்த சில வருடங்களாகவே தமிழகம் முழுவதும் போதைப்பொருள் கலாசாரம் அதிகரித்துக் காணப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. “கஞ்சா விற்பனையைத் தொடர்ந்து புது புது வகை சிந்தட்டிக் டிரக் புழக்கம் அதிகரித்தது. போதைப் பொருள் புழக்கம் அதிகரிக்கும் அதே சமயத்தில் மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கு பிரச்னையும் அதிகரித்தது. அதோடு, திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளை என்று பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது” என்று அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன் வைத்தது.
கஞ்சா விற்பனையைக் கட்டுப்படுத்த தமிழகக் காவல்துறை சிறப்பு நடவடிக்கையை முன்னெடுத்ததது. அதே வேளையில் ரவுடிகளை கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
என்கவுண்டர்:
குற்றச் சம்பவங்கள் அதிகரிக்கும் அதே நேரத்தில் புதிது புதிதாகக் குற்றவாளிகளும் புற்றீசல் போல முளைத்துக்கொண்டே இருந்தனர். அவர்களைக் கட்டுப்படுத்துவது காவல்துறையினருக்கு பெரும் சவாலாக மாறிப்போனது. தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இருந்தபோதிலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்நிலையில்தான், குற்றச் செயலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான நபர்கள் போலீஸ் விசாரணை சமயத்தில் வழுக்கி விழுந்து கை, கால் உடைந்து மாவு கட்டு போடும் சூழல் ஏற்பட்டது. இதுவொருபுறமிருக்கத் தமிழகத்தில் துப்பாக்கி சத்தமும் அடிக்கடி கேட்க ஆரம்பித்தது.
தமிழகக் காவல்துறை வரலாற்றில் இதுவரை 120-க்கும் மேற்பட்ட என்கவுண்டர் சம்பவங்கள் நடந்திருக்கிறது. அதிலும் கடந்த மூன்று ஆண்டு திமுக ஆட்சியில் மட்டும் இதுவரை 16 என்கவுண்டர் சம்பவங்கள் நடந்திருக்கிறது. இதில் கடைசியாக நடந்த சீசிங் ராஜா தொடங்கி நீராவி முருகன், சோட்டா வினோத், குள்ள விஷ்வா, சண்டே சதிஷ், கொம்பன் ஜெகன், காக்காத்தோப்பு பாலாஜி என மொத்தம் 16 என்கவுண்டர் நடந்திருக்கிறது. இந்த அனைத்து சம்பவத்திலும் காவல்துறை சொன்னது தற்காப்புக்காக நடந்த தாக்குதலில் எதிராளி உயிரிழந்தார் என்பது மட்டுமே.
குற்றம்சாட்டும் அமைப்புகள்!
காவல்துறை போலி மோதல் சாவுகளைத் திட்டமிட்டே நடத்துகிறது என்று மனித உரிமை ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். என்கவுண்டர் சம்பவம் தொடர்பாகக் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில், ” சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் பதவியேற்றபின் ரவுடியிசம் தொடர்பாக பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ‘ரவுடிகளுக்கு புரியும் மொழியில் பேசுவோம்’ என்று சொல்லியிருந்தார். மாநகரத்தின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவேண்டிய பொறுப்பில் உள்ள ஒருவர் இப்படிப் பொறுப்பற்ற கருத்தை நாங்கள் கண்டிக்கிறோம். அதன் தொடர்ச்சியாக 10 வாரங்களுக்குள் சென்னை பெருநகரக் காவல் எல்லைக்குக்குள மூவர் சுட்டுக்கொல்லப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. இந்த போக்கு சட்டத்தின் ஆட்சிக்கு முற்றிலும் எதிரானதாகும்.
2021-ம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இப்போதுவரை 16 பேர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். என்கவுண்டர் மூலம் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கமுடியும் என்ற காவல்துறையின் போக்குக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். ரவுடிகளை கட்டுப்படுத்துவதுதான் காவல்துறையின் பொறுப்பு. இது தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து, ஓய்வுபெற்ற நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய ஆணையம் அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும். அதோடு, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உடனடியாக உண்மை அறியும் குழுவை அமைத்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும். இதில் தொடர்புடைய அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்படவேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தனர்.
வேண்டுமென்று நடப்பதில்லை!
என்கவுண்டர் விவகாரத்தில் காவல்துறையைச் சேர்த்தவர்கள் கருத்து என்ன என்பது குறித்து உயர் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். “தமிழகத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட என்கவுண்டர் சம்பவம் நடந்திருக்கிறது. அதில் சீவலப்பேரி பாண்டியன் தொடங்கி பங்கு குமார், சீசிங் ராஜா வரை அடக்கம். அனைவருமே ஏதோ ஒரு வகையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தவர்கள். சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்கள். அவர்களைக் கைது செய்து அழைத்துவரும் அல்லது விசாரணையின்போது தப்பிக்க அல்லது எங்களைத் தாக்க முற்படும்போது எதிர்த்தாக்குதல் நடத்தும்போது மரணம் நிகழ்ந்திருக்கும். ஒரு குற்றவாளியைக் கைது செய்யும்போது காவல்துறையினர் 40-க்கும் மேற்பட்ட விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியதிருக்கிறது. அந்த நபரை அடிக்கும் உரிமை கூட காவல்துறையினருக்கு கிடையாது. அப்படியிருக்க ஒருவர் உயிர் போனால் அதற்கு அந்த காவல்துறை அதிகாரி எத்தனை கட்ட விசாரணைக்கு உட்பட வேண்டியதிருக்கும் என்பது எங்களுக்கு மட்டுமே தெரியும்.
துறை ரீதியான விசாரணை ஒருபக்கம், மனித உரிமைகள் ஆணையம் இன்னொரு பக்கம் என்று பலருக்கு காவல்துறையினர் பதில் சொல்லவேண்டியதிருக்கும். இவ்வளவு சிக்கல் இருக்கும்போது நாங்கள் ஏன் வேண்டுமென்றே ஒருவரைச் சுட்டுக் கொலை செய்யப் போகிறோம். அதேபோல, இந்த திமுக ஆட்சியில்தான் அதிக என்கவுண்டர் நடந்திருக்கிறதா என்று கேட்டால் இல்லை. 2001-2006 அதிமுக ஆட்சியில் 29 என்கவுண்டரும், அதேபோல 2006-2011 திமுக ஆட்சியில் 31 என்கவுண்டரும் நடந்திருக்கிறது. எது அதிகம் கம்மி என்பது வாதத்துக்கு அழகல்ல. தப்பிப்பவர்கள், தாக்கா முயற்சி செய்தவர்கள் எனப் பலரையும் காலுக்குள் கீழ் சுட்டுப் பிடித்தவர்கள் அதிகம். கொலை தான் நோக்கமென்றால் அவர்களை மட்டும் ஏன் காலுக்குக் கீழ் சுட்டுப் பிடிக்கப் போகிறோம். தவிர்க்க முடியாத சூழலில் எங்களைத் தற்காத்துக்கொள்ளவே இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது. வேண்டுமென்றோ அல்லது திட்டமிட்டோ எதுவும் நடப்பதில்லை. ரவுடிகளை அடக்கி ஒடுக்கத் தேவையான நடவடிக்கைகளை காவல்துறை எந்த காலத்திலும் முன்னெடுக்கத் தயங்காது” என்றார்கள் விரிவாக.