கடந்த 14-ம் தேதி கும்பகோணத்தின் தனியார் கல்லூரியில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைக் கச்சேரி நிகழ்ச்சி நடைபெற்றது. காவிரி டெல்டா பகுதியில் முதல்முறையாக நடந்த இந்த இசை நிகழ்ச்சியை காண, ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இசை நிகழ்ச்சி தொடங்கும் முன்பே விட்டு விட்டு மிதமான மழை பெய்துக்கொண்டிருந்தது. இதனால் நிகழ்ச்சி தொடங்க காலதாமதமானது. ஆனாலும் ரசிகர்கள் கலைந்து செல்லாமல் இசை நிகழ்ச்சியை காண காத்திருந்தனர். இசை நிகழ்ச்சி தொடங்கியதும் மழையும் தொடங்கியது.
ரசிகர்கள் மழையில் நனைந்தபடியே இளையராஜாவின் இசையை ரசித்தனர். இது தொடர்பான வீடியோ அப்போதே சமூகவலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில், இன்று இசையமைப்பாளர் இளையராஜா தன் எக்ஸ் பக்கத்தில், “பெரும் மழையிலும், என் இசை நிகழ்ச்சியை ரசிக்க வந்த கும்பகோணம் மக்களே, உங்களின் ஆதரவை மறக்கமுடியாது. நன்றி! இனி என் இசை பயணம் தலைநகரில் மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஊர்களில் நடைபெறும்.” எனக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்திருக்கிறார்.