கிரிக்கெட்டை மையப்படுத்தி பல திரைப்படங்களில் வந்துவிட்டாலும் சற்று திரைக்கதை அம்சத்தில் மாற்றத்தை நிகழ்த்தி தொடர்ந்து அதை மையப்படுத்திய படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ஹிட்டடிக்கிறது.
கிரிக்கெட்டை மையப்படுத்திய ஒவ்வொரு திரைப்படமும் அதனுள் இருக்கும் ஒவ்வொரு விஷயத்தைப் பேசியிருக்கிறது. ஸ்போர்ட்ஸ் டிராமா என்றாலே முடிவு ஒரே வடிவில்தான் இருக்கும் என்ற விஷயத்தையும் சமீபத்திய ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படங்கள் மாற்றியிருக்கின்றன.
இந்தாண்டு மட்டும் கிரிக்கெட்டை மையப்படுத்தி மூன்று திரைப்படங்கள் வந்துவிட்டன. கடந்த வாரம் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படமும் கிரிக்கெட்டை மையப்படுத்தியதுதான். கிரிக்கெட்டை மையப்படுத்திய தமிழ் திரைப்படங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.
சென்னை 28:
வெங்கட் பிரபு இயக்குநராக அறிமுகமான திரைப்படம் ‘சென்னை 28’ . சென்னையில் இருக்கும் இளைஞர்களின் கிரிக்கெட் குழு, அவர்களின் நட்பு, காதல், மோதல் என பக்காவான பொழுதுபோக்கு திரைப்படமாக எடுத்திருந்தார் வெங்கட் பிரபு. கிரிக்கெட்டை மையப்படுத்திய திரைப்படங்களின் டிரெண்டுக்கு முதல் புள்ளி வைத்தது இந்த திரைப்படம்தான். வாழ்வியலோடு கலந்திருக்கும் விளையாட்டை காமெடியுடன் கலந்து தன்னுடைய டைரக்ஷன் கரியரின் முதல் படைப்பாக கொடுத்தார் வெங்கட் பிரபு. இதன் பிறகு வந்த கிரிக்கெட்டை மையப்படுத்திய திரைப்படங்களெல்லாம் கிரிக்கெட்டில் நிலவுல் அரசியல் என தொடங்கி பல பக்கங்களை புரட்டியது. இத்திரைப்படத்திற்கு இரண்டாம் பாகமும் வந்தது.
ஜீவா:
சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம், ஜீவா. கிரிக்கெட்டை வீரராக வேண்டும் என்கிற லட்சியத்துடன் இருக்கும் இளைஞனைப் பற்றியதுதான் இத்திரைப்படம். இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட ஆசைப்படும் ஒருவனின் கனவுக்கு அரசியல் எப்படியான முட்டுகட்டை விதிக்கிறது என்பதையும் இத்திரைப்படத்தில் பேசியிருப்பார் சுசீந்திரன்.
கனா:
கிரிக்கெட் வீரராக வேண்டுமென்கிற கதாநாயகிக்கு எப்படியான தடைகள் வந்தடைகிறது, எந்தெந்த போராட்டங்களையெல்லாம் சந்திக்க வேண்டிருக்கிறது என்பதைத்தான் இந்தத் திரைப்படத்தில் காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குநர் அருண்ராஜா காமராஜ். கிரிக்கெட் கனவாக கொண்டு செயல்படும் பெண்களின் பக்கத்தையும் பேசியது இத்திரைப்படம்.
800:
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் பயோப்பிக் திரைப்படமான ‘800’ படத்தை அறிமுக இயக்குநர் ஶ்ரீபதி இயக்கியிருந்தார். முத்தையா முரளிதரனின் கிரிக்கெட் பயணம், அவரின் வாழ்க்கையில் சந்தித்த விஷயங்கள் என்பதைதான் இந்த பயோபிக்கில் காட்சிப்படுத்தியிருந்தார்கள்.
2024-ல் வெளியான கிரிக்கெட்டை மையப்படுத்திய திரைப்படங்கள்:
இந்தாண்டு மட்டும் தற்போது வரை ‘ப்ளூ ஸ்டார்’, `லால் சலாம்’, `லப்பர் பந்து ‘ என மூன்று கிரிக்கெட்டை மையப்படுத்திய திரைப்படங்கள் வெளியாகிவிட்டன. அறிமுக இயக்குநர் ஜெயகுமார் இயக்கத்தில் உருவான ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம் கிராமப்புரங்களில் கிரிக்கெட் விளையாட்டுகளில் நிகழும் சாதிய அரசியலை பேசியது. லால் சலாம் திரைப்படமும் உள்ளூர் கிரிக்கெட்டின் ஒரு பக்கத்தைப் பேசியது.
கடந்த வாரம் வெளியான லப்பர் பந்து திரைப்படம் கிராமப்புறங்களில் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டிகளில் எப்படியான சாதிய அரசியல் நிலவுகிறது என்பதை அழுத்தமாக பேசியது. இதுமட்டுமல்லாமல், ஈகோ என்ற விஷயத்தை வைத்து இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையில் விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்திருந்தார் அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து.
இதனைத் தவிர கிரிக்கெட்டை மையப்படுத்தி வந்த தமிழ்த் திரைப்படங்கள் பற்றியும் அதன் ஸ்பெஷல் பற்றியும் கமென்ட்டில் பதிவிடுங்கள்!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…