அழுத்தமான அரசியலைப் பேசும் ஒரு பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி சிக்ஸர் அடித்திருக்கிறது ‘லப்பர் பந்து’.
விஜயகாந்தின் ‘நீ பொட்டு வைத்த தங்க குடம்’ பாடல், ஜென்சன் – பாலசரவணனின் அட்டகாசமான காமெடி டிராக் எனப் படம் நெடுக அத்தனை விஷயங்களுக்கு அவ்வளவு கைதட்டல்களை மக்கள் கொடுக்கிறார்கள். ‘அயலி’ வெப் சீரிஸ் ஜென்சனுக்கு நல்லதொரு பாதையை சினிமாவில் அமைத்துக் கொடுத்திருந்தது.
ஜென்சன் நடிக்கும் கதாபாத்திரங்கள் அந்தக் கதையில் ஏதேனும் ஒரு தாக்கத்தை நிச்சயமாக உருவாக்கிவிடும். அப்படி லப்பர் பந்தை உயரத்திற்கு பறக்கவிடுவதற்கும் பெரும்பங்காற்றியிருக்கிறது இவருடைய கொளஞ்சி கதாபாத்திரம். ‘லப்பர் பந்து’ படத்துக்கு வாழ்த்துகளைக் கூறி பேசத் தொடங்கினோம். கலகலப்பாக பேச தொடங்கியவர்…
‘லப்பர் பந்து’ படத்தோட உங்க கொளஞ்சி கதாபாத்திரத்துக்கு எப்படியான வரவேற்பு கிடைச்சிருக்கு?
நல்ல வரவேற்பு கிடைச்சுட்டு இருக்கு… ஹ்யூமர் எனக்கு வரும்னு என்னைச் சுற்றி இருக்கிறவங்களுக்கு தெரியும். அப்படி என்னைப் பற்றி தெரிஞ்சவங்களுக்கு இந்த ‘லப்பர் பந்து’ கொளஞ்சி கதாபாத்திரம் கொஞ்சம் சப்ரைஸ்தான். இந்த கதாபாத்திரத்தோட தன்மைதான் அந்த சப்ரைஸுக்குக் காரணம். ஒரு மனுஷனுக்கு பல வகையான எமோஷன்ஸ் இருக்கும். அதனுடைய அனைத்து கோணத்தையும் இந்த கொளஞ்சி கதாபாத்திரம் டீல் பண்ணியிருக்கு. எப்போதும் ஒரு குடிகாரனுக்கு பல எமோஷன்ஸ் இருக்கும். ஆனா, திரைப்படத்தோட கதாபாத்திரங்கள்ல பொதுவாக நமக்கு தெரியுறுது அவங்களோட ஹ்யூமர் பக்கம் மட்டும்தான். இந்த கதாபாத்திரத்தின் அப்படி கிடையாது. கொளஞ்சி கதாபாத்திரத்துக்குள்ள இருக்கிற அத்தனை எமோஷனையும் கடத்துறத்துக்கு ‘லப்பர் பந்து’ வாய்ப்புக் கொடுத்துச்சு. இது முக்கியமாக எனக்கு புதுசாக இருந்துச்சு. பலருக்கும் இது கனெக்ட் ஆகியிருக்கு. இந்தப் படத்துல என்னுடைய கதாபாத்திரம் ஹரிஷ் கல்யான் சார், பால சரவணனை அவமானப்படுத்துற மாதிரி இருக்கும். அதே சமயம் அட்டக்கத்தி தினேஷ்கூட நல்ல ஒரு கெமிஸ்ட்ரி இருக்கும். இதுக்கெல்லாம் இவங்க மூணு பேரும் நல்ல இடத்தைக் கொடுத்தாங்க. நான் அப்படி தயக்கமில்லாம பண்றதுக்கு முக்கிய காரணமே இவங்க கொடுத்த இடம்தான்.
இந்தக் கதாபாத்திரம் உங்களுக்குக் கிடைச்சது எப்படி?
இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து சார் இதுக்கு முன்னாடி எனக்கு பழக்கம் கிடையாது. ‘அயலி’ சீரிஸ் பார்த்துட்டுதான் அவர் என்னை இந்த கதாபாத்திரத்துக்குக் கூப்பிட்டார். அயலி ஏற்படுத்திக் கொடுத்த விஷயங்கள்ல இதுவும் ஒன்னு. ஆனா, அயலி பார்த்துட்டு இந்த கதாபாத்திரத்தை நான் இழுத்துக் கொண்டு போவேன்னு நம்பினதும் எனக்கு ஆச்சரியம்தான். எனக்குக் கிடைச்ச அதிர்ஷடம்னு இதை நான் நினைக்கிறேன். இயக்குநர் தமிழ் சார் என்கிட்ட கதாபாத்திரத்தை பத்தி பெரிதளவுல விளக்கம் கொடுக்கமாட்டாரு. அந்த கதாபாத்திரம் எப்படி நடந்துக்கணும்னு மட்டும் அதை காட்சிக்குக் காட்சி சொல்லுவாரு. இவருடைய ஸ்டைல் இது. இது எனக்கு கொஞ்சம் கஷ்டமாகதான் இருந்துச்சு.
உங்களுடைய கதாபாத்திரங்கள் அனைத்தும் படத்தில் ஏதேனும் ஒரு தாக்கத்தை உருவாக்கக்கூடியதாக இருக்கே! இதை கவனிச்சுதான் நீங்க பண்றீங்களா?
டூ பி ஃப்ராங்க்!… ‘லப்பர் பந்து’ திரைப்படம் வரைக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செஞ்சு நடிக்கிற தனிச்சுதந்திரம் எனக்கு கிடைக்கலை. ஆனா, ‘லப்பர் பந்து’ படத்துக்குப் பிறகு வந்த அத்தனை கதாபாத்திரங்களையும் நான் பார்த்துதான் பண்றேன். முழுமையாக கதைகளையும் நான் படிச்சுட்டுதான் பண்றேன். ஒரு திரைப்படம் வந்ததும், முதலாவதாக நான் என்னுடைய கேரக்டர் என்னனுதான் பார்ப்பேன். ஆனா அதைத் தாண்டி அந்தக் கதை என்ன விஷயங்களையெல்லாம் நிகழ்த்தும்னு கவனிப்பேன். கதையில அரசியல் ரீதியாக தவறு இருந்திடக்கூடாதுனு பார்ப்பேன். இப்போ கதைகளைப் படிச்சு பண்றது ஒரு வேற மாதிரியான ஃபீல்தான். நான் அந்த கதையை படிச்சு, அதை உள்வாங்கி, அதை நான் ஸ்பாட்ல கொடுத்து, இயக்குநர் அதை திருத்துறதுலாம் பயங்கரமான ஒரு ஆனந்தத்தைக் கொடுக்குது. இன்னொரு விஷயம் முக்கியமாக… நான் நடிக்கும்போது மானிட்டர் பார்க்கமாட்டேன். அதை நான் பார்த்துட்டால் கான்ஷியஸ் ஆகிடுவேன். அது என்னுடைய வேலையும் இல்ல. அதை சரியாக பார்த்துக்கிறதுக்கு இயக்குநர்ங்கிற கேப்டன் இருக்காரு. அவரை நம்ம முழுசாக நம்பணும்.
டைரக்ஷன்தான் உங்களுக்கு விருப்பம்னு சொல்லியிருந்தீங்க! அதற்கான முயற்சிகள் எடுத்தீங்களா?
என்கிட்ட நிறையப் பேர் , ‘ ஏன் குடிகாரன் கதாபாத்திரங்களாக தேர்வு செஞ்சு நடிக்கிறீங்க’னு கேட்கிறாங்க. அப்படியான கதாபாத்திரம் மூலமாகதான் யூட்யூப்ல பரிச்சயமானேன். அந்த கதாபாத்திரத்தோட விஷயங்களைதான் என்கிட்ட எதிர்பார்ப்பாங்க. அதை எதிர்பார்க்கிறது தவறும் கிடையாதே. அப்படியான ஸ்டிரியோடைப்பை உடைக்கணும்னுதான் நான் டைரக்ஷனை ஒரு ஆயுதமாக பயன்படுத்தலாம்னு நினைச்சேன். ஆனா, ‘குரங்கு பெடல்’ இந்த விஷயத்தை மாற்றி வேறு ஒரு நம்பிக்கையை கொடுத்துச்சு. அந்த படத்தை பார்த்துட்டு கலையரசன் தங்கவேல்னு ஒரு இயக்குநர் என்னை ஒரு வக்கீல் கதாபாத்திரத்துல நடிக்க வச்சிருக்காரு. அவர் கதாபாத்திரத்தைத் தேர்வு செஞ்ச முறை எனக்கு ஆழுத்தமான ஒரு நம்பிக்கையைக் கொடுத்துச்சு. இதுமட்டுமல்ல, இன்னொரு போலீஸ் கதாபாத்திரமும் நான் பண்ணியிருக்கேன். இந்தக் கதாபாத்திரத்துல துளியும் ஹ்யூமர் இருக்காது. ‘லப்பர் பந்துல் படத்திலையும் வித்தியாசமாக எனக்கும் பால சரவணனுக்கும் டிராக் அமைச்சிருக்காங்க. படத்துல் மோதல் புள்ளி என்கிட்ட இருந்தும் பால சரவணன்கிட்ட இருந்தும்தான் தொடங்கும். எங்க ரெண்டு பேர்கிட்டதான் முடியும். சொல்லப்போனால்… நான் டைரக்ஷன் பண்றதுக்கு ஒரு நடிகருக்கு கதையெல்லாம் சொல்லியிருக்கேன். அதை பண்ணலாம்னு முடிவு பண்ணினோம். அதுக்குப் பிறகு நடிச்சிட்டு இருக்கும்போது ரெட்டை குதிரை சவாரி வேண்டாம்னு ஒரு முடிவுக்கு வந்துட்டேன்.
சிவகார்த்திகேயனும் ‘லப்பர் பந்து’ படக்குழுவை அழைத்துப் பாராட்டியிருந்தார்! படத்தை பத்தி உங்ககிட்ட என்னென்ன விஷயங்கள் சொன்னாரு?
அவர் ‘குரங்கு பெடல்’ சமயத்துலேயே என்னை அழைத்துப் பேசணும்னு நினைத்ததாகச் சொன்னாரு. அதிர்ஷடமாக அவர் என்னைக் கூப்பிடும்போது நான் அன்னைக்கு சென்னைல இருந்தேன். படத்தை பற்றி ரொம்பவே ஜாலியாக பேசிட்டு இருந்தாரு. முக்கியமாக என்னுடைய பழைய அரசியல் நையாண்டி வீடியோக்களை பற்றிப் பேசினாரு. அங்க நிறைய பேர் இருந்தாங்க. அனைவரிடமும் ஜாலியாக பேசினாரு. உங்களுக்கே தெரியும் அவர் எந்தளவுக்கு ஜாலியாக இருப்பார்னு…
அடுத்த லைன் அப்கள் என்னென்ன?
நக்கலைட்ஸ் குழு மொத்தமாக இணைஞ்சு ஒரு படம் பண்ணிக்கிட்டு இருக்கோம். அதுலையும் ஒரு குடிகாரன் கதாபாத்திரம்தான். அதோட அந்த கதாபாத்திரத்தை முடிச்சுக்குவேன் (சிரிக்கிறார்). ரியோ நடிக்கிற ஒரு படத்துல வக்கீலாக நடிக்கிறேன். அடுத்ததாக மணிகண்டனோட சேர்ந்து நீலம் தயாரிப்பு நிறுவனத்துல ஒரு படம் பண்றேன். அப்புறம் முக்கியமாக கி. ராஜநாராயணன் அவர்களோட சிறுகதையை மையப்படுத்தி ஒரு கிராமப்புறம் சார்ந்த ஒரு அடல்ட் டிராமா படத்துல நடிக்கிறேன். இதெல்லாம்தான் என்னுடைய லைப் அப்!