திருப்பதி லட்டு தயாரிப்பில் விலங்குக் கொழுப்பு, மீன் எண்ணெய் போன்றவைப் பயன்படுத்தப்பட்டதாக வெளியான ஆய்வின் முடிவுகள் நாடெங்கும் பெரும் பேசுபொருளாகி வருகிறது.
இவ்வேளையில் தமிழ் திரைப்பட இயக்குநர் ஜி.மோகன், யூடியூப் சேனல் ஒன்றில், கோயில் பிரசாதமான பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலக்கப்பட்டதாகப் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ள திருச்சி மாவட்ட காவல்துறை, `இந்து மதத்தினரையும், இந்து மக்களையும் புண்படுத்தும் விதமாக பேசியதற்கு இயக்குநர் ஜி.மோகனை இன்று காலை கைது செய்துள்ளதாக’ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விளக்கமளித்திருக்கும் திருச்சி மாவட்ட காவல் துறை, “இந்து மதத்தினரையும், இந்து மக்களையும் புண்படுத்தும் விதமாக பேசிய தமிழ் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி கைது செய்யப்பட்டிருக்கிறார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ள இந்து அறநிலையத்துறையில் மேலாளராக பணிபுரிந்து வரும் கவியரசு அவர்கள் கொடுத்த புகாரில்,
கடந்த 21.09.2024-ஆம் தேதி மதியம் 01.00 மணி அளவில் தான் பணியில் இருந்த போது, பக்தர்கள் சிலர் இந்து மதத்தையும், இந்து கோவில்களை பற்றியும் தமிழ் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி அவர்கள் பேசியதாகப் பேசிக்கொண்டிருந்தனர். இதனை தொடர்ந்து எனது செல்போனை பார்த்தபோது, IBC Youtube வளைதளத்தில் “உலகம் முழுவதும் வாழும் இந்துக்கள் என்ன இளிச்சவாயர்களா என்ற தலைப்பில்” அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைவு ஏற்படுத்தும் மாத்திரைகளை பயன்படுத்துவதாக, உண்மைக்கு புறம்பான விமர்சனம் செய்து, கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளதாகவும்,
தற்சமயம் திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் அசைவ பொருள்களான மீன் எண்ணெய்யும், மாட்டு கொழுப்பும் கலந்து உள்ளதாக கூறப்படும் விவகாரம் அடங்குவதற்குள், தமிழக மக்களிடையே மதநல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையிலும், கலவரத்தைத் தூண்டும் வகையிலும், பொய்யான செய்தி பரப்பியதாக, தமிழ் திரைப்பட இயக்குநர் மோகன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கொடுத்த புகாரின் பேரில் சமயபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, மேற்படி நபர் கைது செய்யப்பட்டு. நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட உள்ளார்.” என்று விளக்கம் அளித்து செய்தி வெளியிட்டுள்ளது திருச்சி மாவட்ட காவல் துறை.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…