திருப்பதி ஏழுமலையான் கோயில் என்றாலே லட்டு பிரசாதம்தான் பிரதானம். ஆனால், சமீபத்தில் ஆந்திரப் பிரதேசத்தில் “திருப்பதி பிரசாத லட்டு செய்ய விலங்கு கொழுப்பு, மீன் எண்ணெய் போன்றவை பயன்படுத்தப்பட்டது” என ஒய். ஆர். எஸ் கட்சி மீது குற்றம்சாட்டியது தெலுங்கு தேசக் கட்சி.
இந்தக் குற்றச்சாட்டை பல வழிகளில் மறுத்த ஒய்.ஆர். எஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, இறுதியில் பிரதமர் மோடியின் கவனத்துக்கு இந்த விவகாரத்தை கொண்டு சென்று, ‘இந்தக் குழப்பத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கடிதம் எழுதினார். தற்போது இந்த விவகாரம் தேசிய அரசியலிலும் கவனம் பெற்று வருகிறது.
இதற்கிடையில், மாட்டுக்கொழுப்பு மற்றும் பன்றிக்கொழுப்பு சேர்க்கப்பட்டு லட்டு தயாரிக்கப்பட்டதால் திருப்பதி கோயில் சமையல் அறையின் புனிதம் கெட்டுவிட்டதாக புரோகிதர்கள் தெரிவித்தனர். மேலும், சமையல் அறையை புனிதப்படுத்தும் விதமாகவும், தவறை சரி செய்யும் விதமாகவும், கோயில் புனிதத்தன்மையை பராமரிக்கும் விதமாகவும் மகாசாந்தி யாகம் நடத்தினர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த அதிர்ச்சி வீடியோ வெளியாகி பரபரப்பை கூட்டியிருக்கிறது.
தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம், கொல்லகுடத்தைச் சேர்ந்த தொண்டு பத்மாவதி என்ற பக்தர், கடந்த 19-ம் தேதி திருப்பதி கோயிலுக்கு தரிசனத்துக்காக குடும்பத்துடன் சென்றிருக்கிறார். அங்கிருந்து உறவினர்களுக்கு திருப்பதி பிரசாதம் வழங்க வேண்டும் என பிரசாத லட்டு வாங்கி வந்திருக்கிறார். இந்த நிலையில், உறவினர்களுக்கு பிரசாதம் கொடுக்க லட்டை உடைத்தபோது அதிர்ச்சியளிக்கும் விதமாக லட்டில் குட்கா பாக்கெட் இருந்திருக்கிறது.
மேலும், அதில் குட்காவின் துகள்களும், அதன் வாடையும் லட்டில் கலந்திருக்கிறது. இதைப் பார்த்து அதிச்சியடைந்த தொண்டு பத்மாவதி இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்தச் செய்தி தற்போது அடுத்த சர்ச்சையை ஏற்படுத்த, இது தொடர்பாக விசாரணை நடத்த தேவஸ்தான குழு கொல்லகுடம் புறப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.