திரையரங்கில் வெளியாகிய குறுகிய நாட்களிலேயே ஓ.டி.டியில் வெளியாவதாலும் சில மாநிலங்களில் திரைப்படக் காட்சிகள் முன்னதாகவே தொடங்கிவிடுவதாலும் திரையரங்க உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என தொடர்ந்து பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கூடியிருக்கிறது. நஷ்டம் ஏற்படாத வகையில் தடுப்பதற்கு தயாரிப்பாளர்கள் மற்றும் தமிழக அரசின் கவனித்திற்கு எடுத்துச் செல்வதற்கு சில தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள்.
“பெரிய நடிகர்களின் படம் 8 வாரம் கழித்தும், அதற்கடுத்த வரிசையில் உள்ள நடிகர்களின் படம் 6 வாரங்கள் கழித்தும் ஓ.டி.டியில் திரையிடும்படி கேட்டுக்கொள்கிறோம். தமிழ் திரைப்படங்கள் இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் தான் திரையிடப்பட வேண்டும். சில மாநிலங்களில் முன்னதாக திரையிடப்படுவதால் தமிழகத்தில் வசூலில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.” என தயாரிப்பாளர்களிடம் கோரிக்கை வைத்திருக்கிறது தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்.
இதுமட்டுமின்றி, “திரையரங்குகளில் பராமரிப்பு கட்டணத்தை அனுமதி கட்டணத்தில் இருந்து 10% வசூலிக்க அனுமதி தர வேண்டுகிறோம். மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளுக்கு ரூபாய் 250 வரையும், A/C திரையரங்குகளுக்கு ரூபாய் 200 வரையும், NON A/C திரையரங்குகளுக்கு ரூபாய் 150 வரையும் கட்டணம் நிர்ணயித்து கொடுக்க வேண்டும். நம் பக்கத்து மாநிலங்களில் 24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிட அனுமதி உள்ளது. அதுபோல் தமிழ்நாட்டிலும் இது போன்ற அனுமதிகள் வழங்கப்பட வேண்டும். திரையரங்குகளில் இத்தனை காட்சி தான் திரையிட வேண்டும் என்று கட்டுப்பாடு இல்லாமல் திரையிட அனுமதி தர வேண்டும்.” என தமிழக அரசுக்கும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…