புதுடெல்லி,
சமீபத்தில் ஆப்கானிஸ்தான் – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஷார்ஜாவில் நடைபெற்றது. இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் கைப்பற்றி வரலாறு படைத்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் யூடியூப் சேனல் ஒன்றில் ஆப்கானிஸ்தான் ஒருநாள் அணியின் கேப்டன் ஹஸ்மத்துல்லா பேட்டி ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அப்போது அவரிடம் இந்திய அணி வீரர் யாராவது ஒருவர் ஆப்கானிஸ்தான் அணிக்கு வேண்டுமென்றால் யாரை கேட்பீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது, ஒருவர் அல்ல பலர் உள்ளனர். ஆனால் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்றால் நான் விராட் கோலியை தேர்வு செய்வேன். கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் எவ்வளவு ரன்கள் அடித்திருக்கிறார் என்ற புள்ளிவிவரத்தை பாருங்கள். அவர் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள் கடந்து இருக்கிறார்.
அது எந்த ஒரு வீரராலும் எட்ட முடியாத மிகப்பெரிய சாதனையாகும். சதம் அடிப்பது குறித்து யார் வேண்டுமானாலும் வாயால் சுலபமாக சொல்லிவிடலாம். ஆனால் மைதானத்திற்கு சென்று சதம் அடிப்பது என்பது உண்மையிலே கடினமான காரியம். அதுவும் 50 முறை இதனை விராட் கோலி நிகழ்த்தி இருக்கிறார் என்றால் அது மிகப் பெரிய சாதனை. விராட் கோலிக்காக அவருடைய புள்ளி விவரங்களே பேசும். இவ்வாறு அவர் கூறினார்.