இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் எப்போது? வெளியான விவரம்

கொழும்பு,

இலங்கையில் கடந்த 21ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இதில் ஆட்சியில் இருந்த ரணில் விக்ரமசிங்கே, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே உள்பட 38 பேர் போட்டியிட்டனர்.

தேர்தல் முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் வெற்றி பெறத்தேவையான 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளை யாரும் பெறாததால் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டன.

இதில் நீண்ட இழுபறிக்கு பிறகு தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே (வயது 56) வெற்றி பெற்றார். இதனையடுத்து இலங்கையின் புதிய அதிபராக அனுரா குமார திசநாயகே நேற்று முன்தினம் பதவியேற்றார். அதனை தொடர்ந்து இலங்கையின் பிரதமராக இருந்த தினேஷ் குணவர்தனே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் இலங்கையின் புதிய பிரதமராக தேசிய மக்கள் சக்தி கட்சியின் பெண் தலைவரான ஹரினி அமரசூரியாவை அதிபர் அனுரா குமார திசநாயகே நியமதித்தார்.

இதையடுத்து, அவர் இலங்கை பிரதமராக நேற்று பதவியேற்றார். ஹரினி அமரசூரியாவுடன் தேசிய மக்கள் சக்தி கூட்டனி எம்.பி.க்களான விஜித ஹேரத் மற்றும் லக்ஸ்மன் நிபுனாராச்சி ஆகியோர் கேபினட் மந்திரிகளாக பதவியேற்றனர். இதனை தொடர்ந்து நேற்று இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

இந்நிலையில், இலங்கையில் நவ.14ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என அதிபர் அனுரா குமார திசநாயகே அறிவித்துள்ளார். இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அக்டோபர் 4ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெறும் என அதிபர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து புதிய நாடாளுமன்ற அமர்வு நவ.21ம் தேதி நடைபெறும் எனவும் அதிபர் அனுரா குமார திசநாயகே அறிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.