உதகை: உதகையில் நடந்த வழிகாட்டுதல் முகாமில் மாவட்ட தொழில் மையம் சார்பாக 47 பயனாளிகளுக்கு ரூ.3.65 கோடிக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டன.
புதிய தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி தொழில்கள் தொடங்க ஆர்வமுடைய தொழில்முனைவோர்களை ஊக்குவித்து அவர்களுக்கு தேவையான கடன் வசதியை வங்கிகள் மூலம் ஏற்படுத்தி தரும் நோக்கத்திலும் மற்றும் நீலகிரி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்கடன் ஆண்டு இலக்கை எய்திடும் நோக்கத்திலும் மாவட்ட அளவிலான கடன் வசதியாக்கல் முகாம் உதகை, தோட்டக்கலை கூட்ட அரங்கத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இந்த முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் பெறப்படும் தகுதியான விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு சுயதொழில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. இக்கடன் வழிகாட்டுதல் முகாமில் மாவட்ட தொழில் மையம் சார்பாக 47 பயனாளிகளுக்கு ரூ.3.65 கோடிக்கான கடனுதவிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் வழங்கினர்.
இவ்விழாவில் மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் (பொ) திலகவதி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சந்தானம், வங்கி மேலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.