IPL player retention New rules : ஐபிஎல் 2025 தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு விதிமுறைகளை பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகம் இன்று வெளியிட உள்ளது. இதனடிப்படையில் டிசம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஐபிஎல் மெகா ஏலத்துக்கு பத்து அணிகளும் தயாராக உள்ளன. ஐபிஎல் ரீட்டென்ஷன் விதிமுறைகள் வெளியானவுடன் எந்தெந்த பிளேயர்களை தக்க வைக்கலாம், யாரையெல்லாம் விடுவிக்கலாம் என்பது குறித்து அனைத்து அணிகளும் தீர்க்கமாக முடிவு எடுக்கும். மேலும், வரவிருக்கும் ஐபிஎல் ஏலத்தில் எந்தெந்த பிளேயர்களை எல்லாம் டார்கெட் செய்யலாம் என்ற முடிவுக்கும் வருவார்கள். லேட்டஸ்டாக வெளியாகியிருக்கும் தகவலின்படி, ஐபிஎல் நிர்வாகம் 5 பிளேயர்களை ரீட்டெயின் செய்ய அனுமதி அளிக்கும் என கூறப்படுகிறது.
மூன்று இந்தியர்கள் மற்றும் இரண்டு வெளிநாட்டு பிளேயர்களை ஒவ்வொரு ஐபிஎல் அணியும் தக்க வைத்துக் கொள்ள ஐபிஎல் நிர்வாகம் அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகின்றன. ஒன்று அல்லது இரண்டு ஆர்டிஎம் வாய்ப்பும் கொடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இதனைத் தவிர மற்ற விதிமுறைகள் எல்லாம் ஐபிஎல் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு பிறகே தெரியவரும். பிளேயர் ரீட்டென்ஷன் தொடர்பாக ஐபிஎல் 2025 மெகா அறிவிப்பு இன்று இரவு அல்லது நாளை வெளியாக அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
புதிதாக வெளியாக இருக்கும் ஐபிஎல் பிளேயர் ரீட்டென்ஷன் விதிமுறைகளின்படியே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி இருப்பாரா? இல்லையா? என்பது ஊர்ஜிதமாக தெரியவரும். இதுகுறித்து கடந்த ஐபிஎல் தொடரின்போது பேசிய எம்எஸ் தோனி, இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது குறித்து முடிவெடுக்க இன்னும் நிறைய காலம் இருப்பதாக தெரிவித்தார். அண்மையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, ஐபிஎல் 2025 தொடரில் விளையாடுவது குறித்து அவர் பேசும்போது, பிளேயர் ரீட்டென்ஷன் விதிமுறைகளைப் பொறுத்தே தான் தொடர்ந்து விளையாடுவது குறித்து இறுதி முடிவெடுக்கப்படும், அந்த முடிவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நலனை பொறுத்தே இருக்கும் என்று கூறியிருந்தார்.
அதனால், ஐபிஎல் 2025 பிளேயர்கள் தக்கவைப்பு தொடர்பான மெகா அறிவிப்பை ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதனிடையே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து வெங்கடேஷ் ஐயரை விடுவிக்க அந்த அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதனால், ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் வெங்கடேஷ் ஐயர் பெயர் வர இருக்கிறது.