சென்னை தி.நகர் கண்ணதாசன் தெருவில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற டி.ஜி.பி ஸ்ரீபால். இவரின் மனைவி டாக்டர் கமலி ஸ்ரீபால் (71). இவரை செல்போனில் மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அந்த மர்ம நபர், தன்னை டிராய் அதிகாரி என்று அறிமுகப்படுத்தியிருக்கிறார். பின்னர் அந்த நபர், உங்களின் செல்போன் நம்பர் சட்டவிரோதமான செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால் செல்போன் நம்பரின் இணைப்பு இன்னும் இரண்டு மணி நேரத்தில் துண்டிக்கப்பட்டு விடும் என்று கூறியிருக்கிறார். அதைக்கேட்ட கமலி ஸ்ரீபால், தன்னுடைய செல்போன் நம்பர் எந்தவித சட்டவிரோத செயல்களுக்கும் பயன்படுத்தப்படவில்லை என பதிலளித்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து அடுத்த சில மணி நேரத்தில் கமலி ஸ்ரீபாலுக்கு இன்னொரு போன் அழைப்பு வந்திருக்கிறது. அதில் பேசியவர், தன்னை மும்பை போலீஸ் அதிகாரி என்று அறிமுகப்படுத்தியிருக்கிறார். பின்னர் அவர் உங்களது செல்போன் எண், ஆதார் கார்டு ஆகியவை பண மோசடியில் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளது. அதற்காக 90 ஆயிரம் ரூபாயை உடனடியாக நாங்கள் சொல்லும் வங்கி கணக்கிற்கு அனுப்பி வையுங்கள் என்று கூறியிருக்கிறார். மேலும் உங்களுடைய பண பரிவர்த்தனை விவரங்களை சரி பார்த்துவிட்டு `மீண்டும் உங்கள் வங்கி கணக்குக்கு பணத்தை திருப்பி அனுப்பிவிடுவோம்’ என்று தெரிவித்திருக்கிறார். அதை உண்மையென நம்பிய கமலி ஸ்ரீபால், 90 ஆயிரம் ரூபாயை அனுப்பியிருக்கிறார். அதன்பிறகு தான் கமலி ஸ்ரீபால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்திருக்கிறார். பின்னர் இந்தச் சம்பவம் குறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்தார் கமலி ஸ்ரீபால். இதையடுத்து மாம்பலம் காவல் நிலையத்தில் கமலி ஸ்ரீபால் புகார் அளித்தார். அதன் பேரில் தி.நகர் காவல் மாவட்ட சைபர் க்ரைம் போலீஸார், பணம் அனுப்பிய வங்கி கணக்கு விவரங்கள், தொடர்பு கொண்ட செல்போன் நம்பர்களை ஆய்வு செய்து சைபர் க்ரைம் மோசடி கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.