சூரத்: இரவுப் பணி மற்றும் அதிகாரிகளின் பாராட்டை பெறுவதற்காக, ரயில்வே ஊழியர்கள் 3 பேர் ரயில்பாதையை சேதப்படுத்தி ரயிலைதடம் புரள செய்ய சதி செய்துள்ளனர். அவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் பணியாற்றும் ரயில்வே டிராக்மேன்கள் சுபாஷ், மனீஷ் மிஸ்திரி, சுபம் ஜெய்ஸ்வல் ஆகியோர் ரயில்பாதையை ஆய்வு செய்வதற்காக சென்றனர். அன்று காலை 5.30 மணியளவில் அவர்கள் உயர் அதிகாரிகளுக்கு போன் செய்து தண்டவாளத்தின் ஃபிஸ் பிளேட்டுகள் மற்றும் கிளிப்புகள் அகற்றப்பட்டு ரயிலை தடம்புரளச் செய்யும் செயலில் சமூக விரோதிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு ரயில்வே அதிகாரிகள், போலீஸார் விரைந்து ஆய்வு மேற்கொண்டனர். இத்தகவல் தெரிவிக்கப்பட்டதற்கு சற்று நேரத்துக்கு முன்பாக அந்த வழியாக ஒரு ரயில் கடந்து சென்றதாகவும் ரயில்வே அதிகாரிகள் போலீஸாரிடம் கூறினர். ரயில் சென்ற நேரத்துக்கும்,தண்டவாளம் சேதப்படுத்தப்பட்டதாக தகவல் தெரிவித்த நேரத்துக்கும் இடையே மிகப் குறுகிய நேரம் இடைவெளி மட்டுமே இருந்தது. இதற்குள் தண்டவாளத்தை சேதப்படுத்துவதற்கு வாய்ப்பில்லை என போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது.
புகார் தெரிவித்த ரயில்வே டிராக்மேன்கள் 3 பேரின் செல்போனை கைப்பற்றி போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் அவர்கள்ரயில்பாதையை சேதப்படுத்திய வீடியோ காட்சிகள் அன்று அதிகாலை 2.56 மணி முதல் 4.57 மணிவரை வெவ்வேறு இடைவேளையில் பதிவாகியிருந்தது. மனீஷ் மிஸ்திரி என்ற ஊழியர் மட்டும் தனது செல்போனில் இருந்த போட்டோக்களை அழித்துள்ளார். இதையடுத்து ரயில்வே டிராக்மேன்கள் 3 பேரிடம் போலீஸார்தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தண்டவாளத்தை சேதப்படுத்தியதை ஒப்புக் கொண்டனர்.
பகல் நேரத்தில்பணிக்கு வருவதால், குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முடியவில்லை, அதனால் இரவுப் பணியில்ஈடுபடுவதற்காகவும், மேல் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவதற்காக இந்த சதி செயலில் ஈடுபட்டதை அவர்கள் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். மத்தியப் பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகிய இடங்களில் டெட்டனேட்டர்கள், கேஸ் சிலிண்டர்கள் மூலம் ரயிலை கவிழ்க்க சமீபத்தில் சதி நடந்தது குறிப்பிடத்தக்கது.