புதுடெல்லி: யூடியூபர் சவுக்கு சங்கரை இரண்டாவது முறையாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் மீது வேறு வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை என்றால், அவரை ஜாமீனில் விடுவிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் காவலர்களையும், காவல் துறை பெண் அதிகாரிகளையும் அவதூறாக பேசியதாக யூடியூபரான சவுக்கு சங்கரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து பொதுமக்கள் மத்தியில் வதந்தி பரப்பி, தமிழக அரசுக்கு எதிராக போராடத் தூண்டியதாக சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்து சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த மே மாதம் உத்தரவிட்டார். இதையடுத்து, சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து கடந்த ஆக.9-ம் தேதி உத்தரவிட்டது. மேலும், வேறு வழக்குகளில் சவுக்கு சங்கர் தேவையில்லை என்றால் உடனடியாக அவரை விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. பின்னர், கடந்த ஆக.12-ம் தேதி, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா, சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார். இந்நிலையில், தனது மகன் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி சவுக்கு சங்கரின் தாயார் கமலா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று (செப்.25) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை, குண்டர் தடுப்பு சட்ட அறிவுரைக் குழு ஏற்றுக்கொள்ளவில்லை. அறிவுரைக் குழுவின் பரிந்துரையின்படி, எனவே, அவர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை திரும்பப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சவுக்கு சங்கரை 2-வது முறையாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அவர் மீது வேறு வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லையெனில் அவரை ஜாமீனில் விடுவிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.