புதுடெல்லி: இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதி பாஜக எம்.பி.யான நடிகைகங்கனா ரனாவத் நேற்று முன்தினம் மணாலியில் பேசும்போது, “இமாச்சல பிரதேச காங்கிரஸ் அரசு கடன் வாங்குகிறது. பிறகு அந்தப் பணத்தை சோனியா காந்திக்கு மடைமாற்றி விடுகிறது. மத்திய அரசு பேரிடர் நிவாரண நிதி வழங்கினால் அந்தப் பணம் முதல்வர் நிவாரண நிதிக்கு செல்கிறது. பிறகு அது சோனியா காந்திக்கு செல்கிறது” என்றார்.
இதுகுறித்து அமைச்சர் விக்ரமாதித்ய சிங் நேற்று கூறும்போது, “மத்திய அல்லது மாநிலஅரசின் நிதி சோனியா காந்தியிடம் தரப்படுகிறது என்பதை விட முட்டாள்தனமான கருத்து எதுவும் இருக்க முடியாது. சோனியா காந்திக்கு ஒரு ரூபாய் தரப்பட்டிருந்தாலும் கங்கானா அதற்கானஆதாரத்தை காட்ட வேண்டும். இல்லாவிடில் அவர் மன்னிப்புகோர வேண்டும். இல்லையேல்அவர் மீது வழக்கு தொடரப்படும்.
கங்கனா அடிக்கடி இமாச்சலபிரதேசம் வருவதில்லை. அவரது ‘எமர்ஜென்சி’ திரைப்படத்துக்கு மத்திய தணிக்கை வாரியம் இன்னும் அனுமதி வழங்காமல் உள்ளது. இதனால் கவலை அடைந்துள்ள அவர் சோனியா காந்தி மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார்’’ என்றார். தனது எமர்ஜென்சி திரைப்படம் மத்திய தணிக்கை வாரியத்திடம் சிக்கியுள்ளதாக கங்கனா அண்மையில் கூறினார். இப்படத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வேடத்தில் கங்கனா நடித்துள்ளார்.