ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 26 தொகுதிகளுக்கு இன்று நடைபெறுகிறது.
யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, முதல் கட்டமாகக் கடந்த 18-ம் தேதி 24 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 61.38 சதவீத வாக்குகள் பதிவானது. இதையடுத்து, இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பாஜகவின் மாநில தலைவர் ரவீந்தர் ரெய்னா, ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீது கர்ரா உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் உட்பட 239 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். காஷ்மீர் பள்ளத்தாக்கின் ஸ்ரீநகர், புட்காம், கந்தர்பால் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு உட்பட்ட 15 தொகுதிகளிலும், ஜம்மு பிராந் தியத்தின் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களுக்கு உட்பட்ட 11 தொகுதிகளிலும் உள்ள 25 லட்சத்துக்கும் அதிகமானோர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் இரண்டாம் கட்ட சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் பற்றி தெரிந்துகொள்வோமா!
தாரிக் ஹமீது கர்ரா: ஸ்ரீநகரைச் சேர்ந்த மத்திய ஷால்டேங் தொகுதியில் ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீது கர்ரா போட்டியிடுகிறார். மக்கள் ஜனநாயக கட்சியின் அப்துல் குவாம் பட், அவாமி தேசிய மாநாட்டு கட்சியின் ரியாஸ் அகமது மிர் மற்றும் அப்னி கட்சியின் ஜாப்பர் ஹபீப் தார் ஆகியோரை எதிர்த்து களத்தில் இறங்கியுள்ளார். முன்னாள் எம்பியான தாரிக் ஹமீது கர்ரா முன்னதாக மெஹபூபா முஃப்தியின் தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சியில் பொறுப்பு வகித்தார். பின்னர் பாஜகவுடன் மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி அமைத்ததால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனது எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் கடந்த 2017-ல் இணைந்தார்.
உமர் அப்துல்லா: தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா 2024 சட்டப்பேரவை தேர்தலில் மத்திய காஷ்மீரில் உள்ள இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். மூன்று தலைமுறைகளாக அப்துல்லாவின் குடும்பத்தார் வாகைசூடிய கந்தர்பால் தொகுதி அதில் ஒன்றாகும். மற்றொரு தொகுதியான புட்காமில் மக்கள் ஜனநாயக கட்சியின் சையத் முன்தஜீர் மெஹ்தி, அவாமி தேசிய மாநாட்டுக் கட்சியின் அகா சையத் அகமது மூஸ்வி ஆகியோரை எதிர்த்து அவர் போட்டியிடுகிறார்.
ரவீந்தர் ரெய்னா: ஜம்மு காஷ்மீர் பாஜக மாநில தலைவர் ரவீந்தர் ரெய்னா கடந்த 2014-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷேரா தொகுதியில் போட்டியிட்டு வென்றார். மீண்டும் அதே தொகுதியில் இம்முறை களம் காண்கிறார். இருப்பினும் அவரை எதிர்த்துப் போட்டியிடும் தேசிய மாநாட்டு கட்சியின் சுரிந்தர் சவுத்ரிக்கும் இவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.