ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 26 தொகுதிகளுக்கு இன்று (செப்.25) காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பாஜகவின் மாநில தலைவர் ரவீந்தர் ரெய்னா, ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீது கர்ரா உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் உட்பட 239 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இதனையொட்டி பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “ஜனநாயகத்தை வலுப்படுத்தும் முக்கியமான பங்களிப்பைச் செலுத்தும் வகையில் வாக்காளர்கள் வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். முதல்முறை வாக்காளர்களுக்கு எனது வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “தீவிரவாதம் அற்ற வளர்ந்த ஜம்மு-காஷ்மீர் உருவாக மக்கள் பெருமளவில் திரண்டுவந்து வாக்களிக்க வேண்டுகிறேன்” என அழைப்பு விடுத்துள்ளார்.
இதேபோல் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா “இளம் வாக்காளர்களுக்கு வாழ்த்துகள். இன்று நீங்கள் செய்யும் ஜனநாயகக் கடமை காஷ்மீரில் சேவை, நல்நிர்வாகம், வளர்ச்சியை உறுதி செய்யும். ஊழலை ஒழிக்கும், குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். அரசின்மைக்கு முற்றுப்புள்ளி வைத்து ஜம்மு காஷ்மீரின் தங்கமான எதிர்காலத்துக்கு வித்திடும்” என்று ட்வீட் செய்துள்ளார்.
2 தொகுதிகளில் போட்டி: இத்தேர்தலில் களம் காணும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா, மத்திய காஷ்மீரில் உள்ள இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். மூன்று தலைமுறைகளாக அப்துல்லாவின் குடும்பத்தார் வாகைசூடிய கந்தர்பால் தொகுதி அதில் ஒன்றாகும். மற்றொரு தொகுதியான புட்காமில் மக்கள் ஜனநாயக கட்சியின் சையத் முன்தஜீர் மெஹ்தி, அவாமி தேசிய மாநாட்டுக் கட்சியின் அகா சையத் அகமது மூஸ்வி ஆகியோரை எதிர்த்து அவர் போட்டியிடுகிறார்.
தேர்தல் சுவாரஸ்யம்: காஷ்மீரில் இன்று நடைபெறும் தேர்தலை ஒட்டி ஸ்ரீநகர், புட்காம் தொகுதிகளில் நடைபெறும் வாக்குப்பதிவினை 16 வெளிநாட்டு அமைப்புகளைச் சேர்ந்த 20 பிரதிநிதிகள் கண்காணிக்க வெளியுறவு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் இந்த தூதர்கள் குழுவில் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.