புதுடெல்லி: டெல்லியில் குடிமைப்பணி தேர்வுக்கு தயாராகும் இளம்பெண் வீட்டில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவ்வீட்டின் உரிமையாளரும், அவரது மகன்களும் கைதாகி உள்ளனர்.
டெல்லியின் கிழக்கு பகுதியிலுள்ள ஷக்கூர்பூர் பகுதியில் ஓர் இளம்பெண் வாடகை வீட்டில் வசிக்கிறார். உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த இப்பெண் குடிமைப் பணி தேர்வு எழுதுவதற்காகப் பயிற்சி பெற்று வருகிறார். இவரது வீட்டின் குளியலறை மற்றும் படுக்கை அறையில் ரகசிய கேமராக்கள் வைக்கப்பட்டிருந்தது தெரிந்துள்ளது. இதை யதேச்சையாகப் பார்த்து அதிர்ந்த அந்த இளம்பெண் ஷக்கூர்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன் விசாரணையில் இளம்பெண் வீட்டின் உரிமையாளரும் அவரது இரண்டு மகன்களும் இந்தக் கேமராக்களை பொருத்தி இருப்பது தெரிந்துள்ளது. இதனால், அந்த மூவரும் ஷக்கூர்பூர் காவல் நிலைய போலிஸாரால் கைதாகி உள்ளனர். இவற்றின் பதிவுக் காட்சிகளை அந்த இளம்பெண்ணிடம் அவ்வப்போது சாவியை வாங்கி பதிவிறக்கம் செய்துள்ளனர். இவ்வாறு சாவியை பெறுவதற்காக ஏதாவது காரணம் கூறி வந்துள்ளனர்.
அந்த இளம்பெண் விடுமுறையில் தன் வீட்டுக்குச் சென்றபோது இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பது விசாரணையில் தெரிந்துள்ளது. இத்துடன் அப்பெண்ணின் வாட்ஸ்அப்பையும் ஹேக் செய்து இந்த மூவரும் இளம்பெண்ணை கண்காணித்துள்ளனர். இந்த வழக்கில் விசாரணை தொடர்கிறது.
டெல்லியில் இதுபோல் லட்சக்கணக்கில் மாணவ, மாணவிகள் வீடுகளையும், அதன் அறைகளையும் வாடகைக்கு எடுத்து தங்கி படிக்கின்றனர்.இவர்கள் பாதுகாப்புக்கு அவர்கள் தங்கியுள்ள வாடகை வீடுகளின் உரிமையாளர்கள் பொறுப்பு என டெல்லியின் சட்டம் உள்ளது. இச்சூழலில் உ.பி-யின் இளம்பெண் வீட்டில் நடந்த இந்தச் சம்பவம் குடிமைப் பணி தேர்வாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.