சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. மழைக்காலம் வருவதால் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மதுரவாயல் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட 9 அரசு பள்ளிகளில் படிக்கும் 1,480 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி சின்ன போரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சைக்கிள்களை வழங்கி, முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு ரொக்கப் பரிசுகளை வழங்கினார். மதுரவாயல் தொகுதி எம்எல்ஏ கணபதி, திமுக கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 3 கல்வி ஆண்டுகளில் 16 லட்சத்து 73 ஆயிரத்து 374 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்துக்கு அரசு சார்பில் ரூ.821 கோடி செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலமாக சென்னையில் மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.25.86 லட்சத்தில் 82,512 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது ரூ.71.38 லட்சத்தில் 1,480 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. 2016, 2017-ம் ஆண்டுகளில் தான் டெங்கு பாதிப்பால் உயிரிழப்புகள் அதிகம் நிகழ்ந்தன. அந்த நிலை தற்போது இல்லை. கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு இருப்பதால் தமிழகத்தின் எல்லைகளில் சுகாதாரத் துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கேரளாவில் இருந்து எல்லைதாண்டி வருபவர்களிடம் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குரங்கம்மை நோய்க்கு சிகிச்சை அளிக்க தமிழகத்தில் சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு தயார்நிலையில் உள்ளன. தமிழகத்தில் எந்த மர்ம காய்ச்சலும் இல்லை. மழைக்காலம் வரவுள்ளதால், தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.